ஓசூர் பகுதியில் நோய் தாக்குதலால் ரோஜா மலர் உற்பத்தி பாதிப்பு விவசாயிகள் கவலை

ஓசூர் பகுதியில் நோய் தாக்குதல் காரணமாக ரோஜா மலர் உற்பத்தி பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஓசூர்:
ஓசூர் பகுதியில் நோய் தாக்குதல் காரணமாக ரோஜா மலர் உற்பத்தி பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ரோஜா மலர் சாகுபடி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், பாகலூர் பேரிகை, தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் ஆகிய பகுதிகளில் அதிக அளவில் விவசாயிகள் ரோஜா மலர் சாகுபடி செய்து வருகின்றனர். ஓசூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் சுமார் 3,000 ஏக்கர் பரப்பளவில் பசுமைகுடில்கள் அமைத்து ரோஜா, ஜெர்பரா உள்ளிட்ட கொய்மலர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இங்கு உற்பத்தி செய்யப்படும் ரோஜா மற்றும் கொய்மலர்கள் தாஜ்மகால், கிராண்ட் காலா, பஸ்ட் ஒயிட், பஸ்ட் ரெப் உள்ளிட்ட 25 வகைகளுக்கும் மேற்பட்ட ரோஜா மலர்கள் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல், காதலர் தினம் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் துபாய், வளைகுடா நாடுகள், தெற்காசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதேபோல பல்வேறு கொண்டாட்டங்களுக்காக உள்நாட்டு தேவைகளையும் பூர்த்தி செய்ய கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மராட்டியம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு ரோஜா மற்றும் கொய்மலர்கள் அனுப்பப்பட்டு வருகிறது.
விவசாயிகள் கவலை
இந்தநிலையில் தற்போது சீதோஷ்ண நிலைமாறி, கடும் குளிர் நிலவுவதாலும், வெப்பம் குறைந்ததாலும் ரோஜா செடிகளில் "டவுனி மைல்டுயு" என்ற நோய் தாக்கி உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ேராஜா மலர்கள் சாகுபடி செய்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இது சம்பந்தமாக, கிருஷ்ணகிரி மாவட்ட தோட்டக்கலை அமைப்பின் தலைவர் பாபு என்ற வெங்கடாசலம் கூறுகையில் தமிழகத்தில் சமீபத்தில் வீசிய புயல் தாக்கத்தினாலும், அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்ததாலும் சீதோஷ்ண நிலை மாறியது. ஆனால், ஓசூர் பகுதியில் போதிய அளவில் மழை பெய்யவும் இல்லை. வெயிலும் இல்லை. இதன் காரணமாக, ரோஜா செடிகளுக்கு ''டவுனி மைல்டுயு" என்ற நோய் தாக்கி உள்ளது.
பாதிப்பு
இதனால் இந்த ஆண்டு ரோஜா உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், வழக்கத்தைவிட 40 சதவீதம் குறைவாகவே உற்பத்தி கிடைக்கும். நோயின் காரணமாக பூக்களின் தரமும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மார்க்கெட்டில் நல்ல விலை மற்றும் வரவேற்பு இருந்தும், உற்பத்தி குறைந்துவிட்டதால், இந்தாண்டு கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு, காதலர் தின கொண்டாட்டங்களுக்காக வெளிநாடுகளுக்கு மலர்களை ஏற்றுமதி செய்வதும் பாதிப்படைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story