திருப்பத்தூரில் கலெக்டர் முன்பு மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற வாலிபர்

திருப்பத்தூரில் நடந்த மக்கள் குறைதீர்வுநாள் கூட்டத்தில் வாலிபர் ஒருவர் கலெக்டர் முன்பு மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர்
திருப்பத்தூரில் நடந்த மக்கள் குறைதீர்வுநாள் கூட்டத்தில் வாலிபர் ஒருவர் கலெக்டர் முன்பு மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மக்கள் குறைதீர்வு கூட்டம்
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் சாலை வசதி, வீட்டுமனை, ரேசன்அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர். அதனை கலெக்டர் பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
திருப்பத்தூரை அடுத்த சின்னாரம்பட்டி அடுத்த குமாரபட்டி கிராமத்தை சேர்ந்த மேகநாதன் (வயது 36) என்பவர் கலெக்டரிடம் புகார் மனு அளித்தார். அதில் சுமார் 50 ஆண்டு காலமாக எங்களது நிலத்தில் வசித்து வருகிறோம். அந்த பகுதி அருகே வேறு ஒருவருக்கு ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. அதனை அவர் வேறு நபருக்கு விற்று விட்டார். இதனால் குமாரம்பட்டி ஊர் பகுதிக்கு நாங்கள் சென்று வரும் பொது வழி பாதையை அடைத்து விட்டனர். இதனால் நாங்கள் சுமார் 15-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வருவதற்கு வழியில்லாமல் தவித்து வருகிறோம்.
தீக்குளிக்க முயற்சி
இந்தபிரச்சினைக்கு தீர்வு காணக்கோரி கடந்த 2 வருடமாக திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் 40-க்கும் மேற்பட்ட மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மனுக்கள் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை எனக்கூறி 10-க்கும் மேற்பட்டோர் கலெக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மேகநாதன் என்பவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து கலெக்டர் முன்னிலையில் தனது உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதனால் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரும், அதிகாரிகளும் அவர் மீது உடனடியாக தண்ணீரை ஊற்றி அங்கிருந்து மீட்டு வெளியே அழைத்து சென்றனர். திடீரென கலெக்டர் முன்னிலையில் அவர் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
190 மாணவர்களுக்கு 2 ஆசிரியர்கள்
இதேபோல் ஆலங்காயம் ஒன்றியம் பூங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுமார் 190 மாணவ - மாணவிகள் பயின்று வருகின்றனர். அங்கு 2 ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர் எனவும், அதில் ஒருவர் தலைமை ஆசிரியராக உள்ளார். எனவே 190 மாணவ- மாணவிகளுக்கு இரண்டு ஆசிரியர்களால் போதிய கல்வி போதிக்க முடியவில்லை, உடனடியாக ஆசிரியர்களை பணி அமர்த்த ஆவன செய்ய வேண்டும் என 5-ம் வகுப்பு மாணவி சாதனா கலெக்டரிடம் மனு அளித்தார். அதனை பெற்றுக்கொண்ட கலெக்டர் கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என உறுதி அளித்தார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையா பாண்டியன், சப்-கலெக்டர் பானு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஹரிஹரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைவு
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களை போலீசார் எந்த சோதனையும் மேற்கொள்வதில்லை. இதனால்தான் கலெக்டர் முன்னிலையில் ஒருவர் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். மேலும் மனு கொடுக்க வருபவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பது கிடையாது. பலர் முககவசம் அணிவது கிடையாது. இதனால் கொரோனா போன்ற தொற்று நோய் எளிதில் பரவும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட கலெக்டர் இதன்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story