100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாவட்டமாக திகழ மகளிர் சுயஉதவி குழுக்களின் பங்கு அதிகமாக இருக்க வேண்டும்

100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்திய மாவட்டமாக திகழ மகளிர் சுயஉதவி குழுக்களின் பங்கு அதிகமாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
திருவண்ணாமலை
100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்திய மாவட்டமாக திகழ மகளிர் சுயஉதவி குழுக்களின் பங்கு அதிகமாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் உதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.
சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி முன்னிலை வகித்தார். திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) சந்திரா வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு 2,885 மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த 26 ஆயிரத்து 172 உறுப்பினர்களுக்கு ரூ.30 கோடியே 31 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
கொரோனா தடுப்பூசி...
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக பகுதியில் 14 ஆயிரத்து 666 குழுக்களில் 2 லட்சத்து 10 ஆயிரத்து 396 உறுப்பினர்களும், நகர பகுதியில் 1,732 குழுக்களில் 29 ஆயிரத்து 530 உறுப்பினர்களும் உள்ளனர்.
2021-2022 நிதியாண்டில் 1,132 புதிய குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசியை 86 சதவீதம் பேர் செலுத்தி கொண்டுள்ளனர்.
மகளிர் சுய உதவிக்குழுக்களில் தடுப்பூசி செலுத்தாமல் இருப்பவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.
100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்திய மாவட்டமாக திகழ உங்களுடைய பங்கு அதிகமாக இருக்க வேண்டும்.
கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
எம்.எல்.ஏ.க்கள்
விழாவில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரதாப், எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், ஒ.ஜோதி, மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்ட செயல் அலுவலர் வசந்தகுமார் உள்பட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு துறையை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story