கலெக்டர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் தம்பதி தர்ணா

கலெக்டர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் தம்பதி தர்ணா
கோவை
கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மதியம் 3 மணி அளவில் ஒரு தம்பதியினர் தங்களது குழந்தைகளுடன் வேனில் வந்தனர். அந்த வேனில் பீரோ, மேஜை பாத்திரங்கள் மற்றும் மண்எண்ணெய், டீசல் நிரப்பபட்ட சிறிய கேன்கள் இருந்தது. இதை தொடர்ந்து வேனை நிறுத்திவிட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில், தம்பதியினர் குழந்தைகளுடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் அவர்களை அழைத்து விசாரித்தனர். விசாரணையில்அவர்கள் கோவை மருதமலை ஐ.ஓ.பி. காலனி, பாலாஜி நகர் பகுதியை சேர்ந்த கருப்புசாமி (வயது 41), மனைவி லட்சுமி (30) என்பது தெரியவந்தது.
மேலும் விசாரணையில், கருப்பசாமிக்கும், அவரது அண்ணணுக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் அண்ணன், கருப்பசாமி வசித்து வந்த குடிசை வீட்டில் புகுந்து பொருட்களை சேதப்படுத்தி குடிசை வீட்டை தீ வைத்துள்ளார். இதில் கருப்பசாமியின் குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் சேதமடைந்துள்ளது.
இதனால் விரக்தி அடைந்த கருப்பசாமி கலெக்டர் அலுவலகத்தில் நீதி கேட்டு வந்ததாக தெரியவந்தது. மேலும் அவர்கள் வசித்து வந்த இடம் புறம்போக்கு இடம் என்பதால், வசிப்பதற்கு இடம்வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் காரமடை பகுதியில் அவர்களுக்கு இடம் ஒதுக்குவதாக உறுதி அளித்தனர். மேலும் இதுபோன்ற அசம்பாவித செயல்களில் ஈடுபடக்கூடாது என்று என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story