தஞ்சை மாவட்டத்தில் விரைவில் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படும்

படித்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தஞ்சை மாவட்டத்தில் விரைவில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்
ஒரத்தநாடு:
படித்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தஞ்சை மாவட்டத்தில் விரைவில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்
மக்களை தேடி முதல்வர் சிறப்பு முகாம்
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றியம் பருத்தியப்பர் கோவில் திருமண மண்டபத்தில் மக்களை தேடி முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா தலைமை தாங்கினார். இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
அப்போது அவர் கூறியதாவது:-
வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும்
தமிழகத்தில் நல்லாட்சி நடத்தி வரும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், தேர்தலுக்கு முன்பே உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்கின்ற வகையில் மக்களை சந்தித்து மனுக்களை பெற்றார். இவ்வாறு பெறப்பட்ட மனுக்களில் 50 சதவீத மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்களிடம் நாங்கள் பெறும் மனுக்களின் முக்கியத்துவத்தை நீங்களே தெரிந்துக்கொள்ளலாம். எங்களிடம் தரப்படும் ஒவ்வொரு மனுக்களையும் நீங்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையாக பார்க்கிறோம்.
இந்த மனுக்களுக்கு துறைவாரியாக உரிய தீர்வும், பயனும் சம்பந்தப்பட்டவர்களுக்கு கிடைக்கும். நிறைய பேர் கொடுத்துள்ள மனுக்களில், படித்துவிட்டு இருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வேண்டும் என்று கேட்டுள்ளனர். படித்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தஞ்சை மாவட்டத்தில் விரைவில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பொய்யுண்டார்கோட்டை
இதேபோல் ஒரத்தநாடு, பொய்யுண்டார்கோட்டை, ஊரணிபுரம் ஆகிய இடங்களில் நடந்த மக்களை தேடி முதல்வர் சிறப்பு முகாமில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். இதில் தமிழக அரசு கொறடா கோவி. செழியன், எம்.எல்.ஏ.க்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராமச்சந்திரன், மகேஷ் கிருஷ்ணசாமி, முன்னாள் எம்.பி.பரசுராமன், மாவட்ட ஊராட்சி குழு தலைவி உஷா புண்ணியமூர்த்தி, ஒன்றியகுழு தலைவர்கள் ஒரத்தநாடு பார்வதி சிவசங்கர், திருவோணம் செல்லம் சவுந்தரராஜன், தி.மு.க. ஒன்றிய பொறுப்பாளர்கள் செல்வராசு, ரமேஷ் குமார், கார்த்திகேயன், முருகையன், ஒரத்தநாடு நகரச் செயலாளர் கிருஷ்ணகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அய்யம்பேட்டை
அய்யம்பேட்டை பேரூராட்சி வளாகத்தில் நடைபெற்ற முகாமிற்கு கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா தலைமை தாங்கினார். அரசு தலைமை கொறடா கோவி.செழியன், மாநில பெற்றோர் -ஆசிரியர் கழக துணைத்தலைவர் எஸ். கல்யாண சுந்தரம், ஜவஹிருல்லா எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க. நகர செயலாளர் வக்கீல் டி.பி.டி. துளசி அய்யா வரவேற்றார். கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார். இதில் பேரூராட்சிகள் உதவி இயக்குனர் கனகராஜ், தி.மு.க. ஒன்றிய பொறுப்பாளர்கள் தாமரைச்செல்வன், நாசர், ஒன்றியக்குழு தலைவர் சுமதி, வட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் பேரூராட்சி செயல் அதிகாரி ராஜசேகர் நன்றி கூறினார்.
சுவாமிமலை
சுவாமிமலை பேரூராட்சியில் மக்களை தேடி முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் முத்துச்செல்வன், கும்பகோணம் ஒன்றியக்குழு தலைவர் காயத்ரி அசோக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து 800-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை பெற்றனர். சுவாமிமலை அரசு பள்ளி மாணவர்கள் பள்ளியை தரம் உயர்த்தி தர வேண்டும் என கோரிக்கை மனு வழங்கினர். முடிவில் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜதுரை நன்றி கூறினார்.
பாபநாசம்
பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த முகாமில் அரசு தலைமை கொறடா கோவி செழியன் கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று பேசினார். இதில் பாபநாசம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சுமதி கண்ணதாசன், மாவட்ட கவுன்சிலர்கள் தாமரைச்செல்வன், பாத்திமாஜான் ராயல்அலி, மாவட்ட துணைச்செயலாளர் கோவி.அய்யாராசு, பாபநாசம் தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர் உள்ளிட்ட பலர் பேசினர். தஞ்சை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பிரேமலதா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். முடிவில் பாபநாசம் தாசில்தார் மதுசூதனன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story