தமிழகத்தில் 93 லட்சம் பேர் 2-வது தவணை கொரோனா தடுப்பூசி போடாமல் உள்ளனர்

தமிழகத்தில் 93 லட்சம் பேர் குறிப்பிட்ட தேதி முடிந்த பின்னரும் 2-வது தவணை கொரோனா தடுப்பூசி போடாமல் உள்ளனர் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
வேலூர்
தமிழகத்தில் 93 லட்சம் பேர் குறிப்பிட்ட தேதி முடிந்த பின்னரும் 2-வது தவணை கொரோனா தடுப்பூசி போடாமல் உள்ளனர் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
தொடக்க விழா
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து வீடுதோறும் கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்ட தொடக்க விழா வி.ஐ.டி.யில் நேற்று நடந்தது. விழாவுக்கு கலெக்டர்கள் குமாரவேல்பாண்டியன் (வேலூர்), பாஸ்கரபாண்டியன் (ராணிப்பேட்டை), அமர்குஷ்வாஹா (திருப்பத்தூர்) ஆகியோர் தலைமை தாங்கினர். எம்.எல்.ஏ.க்கள் ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன், ஜே.எல்.ஈஸ்வரப்பன், ஏ.நல்லதம்பி, அ.செ.வில்வநாதன், க.தேவராஜி, அமலுவிஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் வரவேற்றார்.
இதில், சிறப்பு அழைப்பாளராக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசியதாவது:-
93 லட்சம் பேர்
தமிழகத்தில் 82 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 52 சதவீதம் பேர் 2-வது தவணை கொரோனா தடுப்பூசியும் போட்டுள்ளனர். 93 லட்சம் பேர் குறிப்பிட்ட தேதி முடிந்த பின்னரும் 2-வது தவணை தடுப்பூசி போடாமல் உள்ளனர். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள 743 கிராம ஊராட்சிகளில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்த தன்னார்வலர்கள் குழு கிராமம்தோறும் நியமனம் செய்யப்பட்டுள்ளது. 3 மாவட்டங்களிலும் 5 கிராம ஊராட்சிகளில் மட்டுமே 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
அனைத்து ஊராட்சிகளிலும் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்த ஊராட்சிமன்ற தலைவர்கள் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எந்தெந்த ஊராட்சியில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டதோ, அந்த ஊராட்சிமன்ற தலைவருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கையொப்பமிட்ட நற்சான்றிதழ் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மூலம் வருகிற ஜனவரி மாதம் 26-ந் தேதி குடியரசு தினவிழாவில் வழங்கப்படும்.
நைஜீரியாவில் இருந்து சென்னைக்கு வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவருடன் தொடர்பில் இருந்த 8 பேருக்கும் மரபியல் மாற்ற வைரஸ் தொற்று இருக்கலாம் என்பதற்காக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஒமைக்ரான் வைரஸ் மிகவும் வேகமாக பரவக்கூடியது. கொரோனா தடுப்பூசி 2 தவணையும் செலுத்தி கொண்டால் அதிலிருந்து நம்மை காப்பாற்றி கொள்ளலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
கட்டாய விடுப்பு
வீடுதோறும் கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்து பேசுகையில், தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற சமயத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகமாக காணப்பட்டது. அதனை உடனடியாக கட்டுப்படுத்துவதற்கு முக்கிய காரணம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், அமைச்சர் மா.சுப்பிரமணியனும் தான்.
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால், தொற்று பாதிப்பு ஏற்பட்டாலும் உயிரிழப்பு ஏற்படுவது குறைவு. எனவே பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டு தங்கள் உயிரை காப்பாற்றி கொள்ள வேண்டும். அதேபோன்று மற்றவர்கள் உயிரையும் காப்பாற்ற தடுப்பூசி செலுத்துவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
100 சதவீதம் தடுப்பூசி இலக்கை அடையாத ஊராட்சிமன்ற தலைவர்களுக்கு கட்டாய விடுப்பு வழங்கப்படும். வேலூர் மாவட்டத்தில் தகுதியான அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிப்பதற்கான நடவடிக்கை விரைந்து மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.
முன்மாதிரி மாநிலம்
விழாவில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பேசுகையில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் தமிழகம் முன்மாதிரி மாநிலமாக உள்ளது. இதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் தான் காரணம். தடுப்பூசி செலுத்துவதில் பின்தங்கிய இடத்தில் காணப்படும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இதனை பொதுமக்கள், அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் செய்து முடிப்போம் என்று தெரிவித்தார்.
முன்னதாக கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் அவசியம் குறித்த குறும்படத்திற்கான குறுந்தகட்டினை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டார். இதில், வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, உதவி கலெக்டர் விஷ்ணுபிரியா, பல்வேறு தொண்டு நிறுவனங்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், டாக்டர்கள், வணிகர்கள், தொழில் முனைவோர்கள், சுய உதவிக்குழுக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வேலூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பானுமதி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story