பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு

பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
சேலம், டிச.17-
மார்கழி மாதம் பிறந்ததையொட்டி சேலம் பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. மேலும் பக்தர்கள் பஜனை பாடியபடி ஊர்வலமாக சென்றனர்.
மார்கழி மாதம்
சேலத்தில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை வேளையில் பக்தர்கள் திருவெம்பாவை, திருப்பாவையை பஜனையாக பாடி ஊர்வலமாக செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.
அதன்படி நேற்று மார்கழி மாதம் தொடங்கியதை தொடர்ந்து சேலம் பட்டைக்கோவில், கடைவீதி, 2-வது அக்ரஹாரம் உள்பட பல்வேறு இடங்களில் பஜனை ஊர்வலம் நடந்தது. அந்த பஜனை குழுவினர் திருப்பாவையை பாடியவாறு ஊர்வலமாக நகரில் வலம் வந்தனர்.
சிறப்பு வழிபாடு
மார்கழி மாதம் முதல் தேதியையொட்டி சேலம் பகுதிகளில் அனைத்து பெருமாள் கோவில்களிலும் நேற்று அதிகாலை சிறப்பு வழிபாடு நடந்தது. சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை பெருமாள் கோவில், பட்டைக்கோவில், ஆனந்தா பாலம் அருகே உள்ள லட்சுமி நாராயணசாமி, செவ்வாய்பேட்டை பாண்டுரங்கநாதர் கோவில், வெங்கடாஜலபதி கோவில், அம்மாபேட்டை வரதராஜ பெருமாள் கோவில், சிங்கமெத்தை சவுந்திரராஜ பெருமாள், சின்னதிருப்பதி வெங்கடேச பெருமாள் உள்பட அனைத்து பெருமாள் கோவில்களிலும் நேற்று சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தப்பட்டன. இதில், அந்தந்த பகுதிகளில் உள்ள திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும், கோவில்களில் பக்தர்கள் திருப்பாவை பாடினர்.
அய்யப்ப பக்தர்கள்
இதேபோல், சேலம் சுகவனேசுவரர் கோவிலில் நேற்று காலை சுகவனேசுவரர், சொர்ணாம்பிகை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் நடந்தது. இதனிடையே, மார்கழி மாதம் தொடங்கியதை தொடர்ந்து சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் சேலம் ராஜகணபதி கோவிலுக்கு வந்து மாலை அணிந்து தங்களது விரதத்தை தொடங்கியதை காணமுடிந்தது. இதனால் அந்த கோவிலில் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
சின்னப்பம்பட்டி
இதே போல இளம்பிள்ளை அருகே உள்ள சின்னப்பம்பட்டியில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் முழுவதும் பஜனை குழுவினர் தினமும் திருப்பாவை பஜனை பாடல்களை பாடுவது வழக்கம். அதன்படி நேற்று ஸ்ரீராம் பஜனை குழுவினர் இசை வாத்தியங்கள் முழங்க, திருப்பாவை, திருவெம்பாவை, தேவாரம், முருகன பஜனை பாடல்களை பாடியவாறு சிறுவர், சிறுமிகள் உள்பட பலர் வீதி, வீதியாக சென்றனர்.
மேலும் மாவட்டத்தில் பல்ேவறு இடங்களில் உள்ள பெருமாள் கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
Related Tags :
Next Story