வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பினர் போராட்டம்

வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்குடி,
பொதுத்துறை வங்கிகளை மத்திய அரசு தனியார் மயமாக்குவதை கண்டித்து காரைக்குடியில் சிவகங்கை மாவட்ட வங்கி ஊழியர்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வேலைநிறுத்தம்
பொதுத்துறை வங்கிகளை தனியார் மையமாக்குவது குறித்து மத்திய அரசு தாக்கல் செய்யப்பட்ட நிதித்துறை பட்ஜெட்டில் அறிவித்து அதன்படி முதற்கட்டமாக 2 வங்கிகளை தனியார் மையமாக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மேலும் இதுதொடர்பான வங்கிகள் சட்ட திருத்த மசோதாவை நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் சார்பில் 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் நடந்து வருகிறது.
முதல் நாள் வங்கிகள் முழுவதும் அடைக்கப்பட்டு போராட்டம் நடைபெற்றது. நேற்று 2-வது நாள் பல்வேறு இடங்களில் வங்கிகள் கூட்டமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிவகங்கை மாவட்ட அளவிலான வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் காரைக்குடி கல்லூரி சாலையில் உள்ள வங்கி முன்பு நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரிகள் சங்க உதவி பொது செயலாளர் மனோஜ் தலைமை தாங்கினார். ஸ்டேட் வங்கி சங்கத்தின் மண்டல செயலாளர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். சிவகங்கை மாவட்ட வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் பிரேம்ஆனந்த் வரவேற்றார்.
போராட்டம்
ஆர்ப்பாட்டத்தில் மாங்குடி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு கண்டன உரையாற்றி பேசியதாவது, நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சிக்காலத்தில் வங்கிகள் உருவாக்கப்பட்டு தேசிய மயமாக்கப்பட்ட நிலையில் அவை கடந்த கால ஆட்சியில் நல்ல முறையில் மத்திய அரசு நடத்தி வந்தது. ஆனால் தற்போதைய மத்திய அரசு போதிய ஆளுமைத்திறன் இல்லாததால் நன்றாக இயங்கி வரும் பொதுத்துறை வங்கிகளை கூட தனியார் மயமாக்க முயற்சி செய்து வருகிறது.
முன்னாள் மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் இருந்த காலத்தில் சிவகங்கை மாவட்டத்தில் ஏராளமான வங்கிகள் ஆரம்பிக்கப்பட்டு அவை நல்ல முறையில் இயங்கி வருகிறது. அதன் பின்னர் எந்தவொரு வங்கி கிளையும் தொடங்கப் படவில்லை. எனவே சிவகங்கை தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர் கார்த்திசிதம்பரம் மூலம் வங்கி சட்ட திருத்த மசோதாவை வாபஸ் பெற தொகுதி மக்களோடு தொடர்ந்து போராடுவோம். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக பாலசங்கர் ஒருங்கிணைப்பு செய்தார். ஆர்ப்பாட்டத்தில் வங்கி ஊழியர்கள் மாறன், மதிமார்சலசு, தாமஸ், சந்திரசேகர், கணேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் கனரா வங்கியைச் சேர்ந்த தொல்காப்பியர் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story