சீறிப்பாய தயாராகும் கறம்பக்குடி ஜல்லிக்கட்டு காளைகள்
பொங்கல் பண்டிகை நெருங்குவதால் கறம்பக்குடி பகுதியில் வளர்க்கப்படும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு நீச்சல் உள்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு சீறிப்பாய தயாராகி வருகின்றன.
கறம்பக்குடி,
பொங்கல் விழா
பண்டைய தமிழ் இலக்கியங்களில் ஏறுதழுவுதல் என போற்றப்படும் காளை அடக்கும் நிகழ்ச்சி தமிழர்களின் வாழ்வியல் கலாசாரங்களில் ஒன்றாகவே இருந்துள்ளது. அதனால்தான் தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது.
தை மாதம் முதல் வைகாசி மாதம் வரை ஜல்லிக்கட்டு விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக புதுக்கோட்டை, மதுரை, தேனி, ராமநாதபுரம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் விமரிசையாக நடத்தப்படுகிறது. அதிலும் மதுரை அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு விழாக்கள் உலக பிரசித்தி பெற்றவையாக உள்ளன. வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் ஜல்லிக்கட்டை பார்ப்பதற்காக தமிழ்நாட்டிற்கு வருகின்றனர்.
ஜல்லிக்கட்டுக்கு தனி மவுசு
குறிப்பாக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டபோது நடந்த மெரினா கடற்கரை போராட்டத்திற்கு பின் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தனி மவுசு ஏற்பட்டு உள்ளது. பெரும் நகரங்களில் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் இளைஞர்கள் கூட ஆர்வம் காட்ட தொடங்கி உள்ளனர். இதனால் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
இதேபோல் ஜல்லிக்கட்டு காளைகளை அடக்குவதிலும் இளைய தலைமுறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
நீச்சல் பயிற்சி
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியில் கருக்கா குறிச்சி, மழையூர், கறம்பக்குடி, காட்டாத்தி, ரெகுநாதபுரம், முள்ளங்குறிச்சி, அம்மானிப்பட்டு, பிலாவிடுதி உள்பட பல்வேறு கிராமங்களில் ஏராளமான ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கப்படுகின்றன. பொங்கல் விழாவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் காளைகளை போட்டிக்கு தயார் செய்வதில் காளை வளர்ப்போர் மும்முரம் காட்டி வருகின்றனர். நீச்சல் பயிற்சி, பாய்ச்சல் பயிற்சி, ஓட்ட பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. மேலும் சத்தான உணவுகளும் வழங்கப்படுகின்றன.
இதுகுறித்து கறம்பக்குடியில் ஜல்லிக்கட்டு காளை வளர்க்கும் இளைஞர்கள் வேல் சரவணன், பிரகாஷ் ஆகியோர் கூறுகையில், கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டபோதும் கொரோனா கட்டுப்பாடுகளால் பல இடங்களில் போட்டிகள் நடத்தப்படவில்லை.
காளைகளை அடக்க பயிற்சி
தற்போது ஊரடங்கு தளர்வுகள் அதிகரிக்கப்பட்டு உள்ளதால் இந்த ஆண்டு உற்சாகத்துடன் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கும் என எதிர்பார்த்து உள்ளோம். மேலும், காளைகளை போட்டியில் பங்கேற்க தயார்படுத்தி வருகிறோம். எனவே அரசு விரைவில் அனுமதி வழங்கி ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை தொடங்க வேண்டும் என தெரிவித்தனர்.
இதற்கிடையே கறம்பக்குடி பகுதியில் உள்ள மாடுபிடி வீரர்கள் சமூக வலைத்தள குழுக்கள் மூலம் இணைந்து காளைகளை அடக்க தீவிர பயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story