கிருஷ்ணகிரியில் வேலை வாய்ப்பு முகாம்: 934 பேருக்கு பணி நியமன ஆணைகள்-கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வழங்கினார்
கிருஷ்ணகிரியில் நடந்த தனியார்த்துறை வேலை வாய்ப்பு முகாமில் 934 பேருக்கு பணி நியமன ஆணைகளை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வழங்கினார்.
கிருஷ்ணகிரி:
வேலைவாய்ப்பு முகாம்
கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவை சார்பில் கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தனியார்த்துறை வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. இதற்கு கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமை தாங்கினார். பர்கூர் டி.மதியழகன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.
மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் வரவேற்றார். முகாமில் தேர்வு செய்யப்பட்ட 934 பேருக்கு பணி நியமன ஆணைகளை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
934 பேர் தேர்வு
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 30.11.2021 வரை 66 ஆயிரத்து 701 ஆண்கள், 70 ஆயிரத்து 601 பெண்கள் என மொத்தம் ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 302 பதிவுதாரர்கள் பதிவு செய்துள்ளனர்.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் 104 தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்றன. 3,455 வேலை தேடுபவர்கள் கலந்து கொண்டனர். அதில் 934 நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த முகாமில் ஓசூரை சேர்ந்த பிரபல நிறுவனங்கள் கலந்து கொண்டன.
இலவச பயிற்சி வகுப்புகள்
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் மத்திய அரசு பணிகள் மற்றும் மாநில அரசு பணிகளுக்கான பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சி மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 61 நபர்கள் அரசு பணி பெற்று பயனடைந்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மகளிர் திட்ட இயக்குனர் ஈஸ்வரன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரசன்ன பாலமுருகன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் தங்கமணி, கிருஷ்ணகிரி தாசில்தார் சரவணன், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மகேந்திரன், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் சுந்தரம் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story