திருச்செந்தூர் அருகே பள்ளிக்கூடத்துக்கு குழந்தைகளை அனுப்பாமல் பெற்றோர்கள் போராட்டம்

திருச்செந்தூர் அருகே, பழுதடைந்த கட்டிடங்களை அகற்றக்கோரி, பள்ளிக்கூடத்துக்கு குழந்தைகளை அனுப்பாமல் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகே, பழுதடைந்த கட்டிடங்களை அகற்றக்கோரி, பள்ளிக்கூடத்துக்கு குழந்தைகளை அனுப்பாமல் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
பழுதடைந்த கட்டிடங்கள்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை அடுத்த கீழ நாலுமூலைக்கிணறு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 4 வகுப்பறை கட்டிடங்கள் உள்ளன. இதில் பழுதடைந்த 2 வகுப்பறை கட்டிடங்களில் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
எனவே பழுதடைந்த வகுப்பறை கட்டிடங்களை அகற்றி விட்டு, புதிய கட்டிடங்கள் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
பெற்றோர்கள் போராட்டம்
இந்த நிலையில் நெல்லை பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து 3 மாணவர்கள் பலியானதையடுத்து, கீழ நாலுமூலைக்கிணற்றில் பழுதடைந்த வகுப்பறை கட்டிடங்களை உடனே அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி, நேற்று காலையில் அப்பகுதி மக்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளிக்கூடத்தின் முன்பாக பெற்றோர்கள் திரண்டு நின்று, கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, திருச்செந்தூர் மாவட்ட கல்வி அலுவலர் மோகனன், கல்வி ஆய்வாளர் ஆனந்தன், திருச்செந்தூர் யூனியன் ஆணையாளர் பொங்கலரசி, வட்டார கல்வி அலுவலர் சரசுவதி, வருவாய் ஆய்வாளர் மணிகண்டன் வேல் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தற்காலிக கூடாரம் அமைக்க ஏற்பாடு
அப்போது பழுதடைந்த வகுப்பறை கட்டிடங்களை அகற்றி விட்டு, புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு ஏற்பாடு செய்வதாகவும், அதுவரையிலும் பள்ளி வளாகத்தில் தற்காலிக கூடாரம் அமைப்பதாகவும் அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
இதையடுத்து மதியம் போராட்டத்தை கைவிட்ட பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பினர்.
பழுதடைந்த வகுப்பறை கட்டிடங்களை அகற்றக்கோரி, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story