தினத்தந்தி புகார் பெட்டி

நாகை, திருவாரூர், மயிலாடுதுறை பகுதிகளில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.
தொற்று நோய் பரவும் அபாயம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதி திருவள்ளுவர் நகர் முதல் தெருவில் கழிவுநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வடிகாலில் கழிவுநீர் வழிந்தோடாமல் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், தேங்கி கிடக்கும் கழிவுநீரில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. இதன்காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள வடிகாலில் கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். -சோமசுந்தரம், மயிலாடுதுறை.
கான்கிரீட் பாலம் வேண்டும்
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியில் கண்கொடுத்தவனிதம் மேட்டுத்தெருவையும், ஆளத்தான்குடியையும் இணைக்கும் வகையில் பாண்டவையாறு ஆற்றில் மரத்தால் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தை தினமும் நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள், பயன்படுத்தி வருகின்றனர். மேலும், இந்த பாலத்தின் வழியாக பூதமங்கலம், அத்திக்கடை, கொரடாச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு வேலைக்கு செல்பவர்களும் சென்று வருகின்றனர். இந்த நிலையில் பாலத்தில் உள்ள மரக்கம்புகள் சேதமடைந்து உள்ளது. இதனால் பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் மரப்பாலத்தில் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு மேற்கண்ட பகுதியில் மரப்பாலத்தை அகற்றிவிட்டு கான்கிரீட் பாலம் அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -அப்துல்லா, கூத்தாநல்லூர்.
அதிகாரிகள் நடவடிக்ைக எடுப்பார்களா?
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரை அடுத்த புனவாசல் பகுதியில் பொதுமக்கள் வசதிக்காக ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் ஆரம்ப சுகாதார நிலையம் அடிக்கடி மூடப்பட்டு காணப்படுகிறது. குறிப்பாக காலை மற்றும் இரவு நேரங்களில் ஆரம்ப சுகாதார நிலையத்தின் கதவு பூட்டப்பட்டுள்ளது. இதனால் சிகிச்சைக்கு வருபவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் முறையாக செயல்பட நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், புனவாசல்.
Related Tags :
Next Story