நாகையில், மண் பானை-அடுப்பு தயாரிக்கும் பணி மும்முரம்


நாகையில், மண் பானை-அடுப்பு தயாரிக்கும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 21 Dec 2021 3:30 PM GMT (Updated: 21 Dec 2021 3:30 PM GMT)

நாகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண் பானை- அடுப்பு தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.வங்கியில் மானிய கடன் வழங்க மண்பாண்ட தொழிலாளர்கள் வலியுறுத்தினர்.

நாகப்பட்டினம்:
நாகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண் பானை- அடுப்பு தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.வங்கியில் மானிய கடன் வழங்க மண்பாண்ட தொழிலாளர்கள் வயுறுத்தினர்.
பொங்கல் பண்டிகை
தமிழர்களின் முக்கிய பண்டிகையாக கொண்டாடப்படுவது பொங்கல் பண்டிகை ஆகும். தை மாதம் முதல் தேதியில் கொண்டாடப்படும் இந்த பொங்கல் பண்டிகைக்கு உழவர் திருநாள் என்ற சிறப்பு பெயரும் உண்டு. ஆண்டுதோறும் வியர்வை சிந்தி உழைக்கும் உழவர்கள், சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. 
பொங்கல் தினத்தன்று மண் பானையில் மஞ்சள் கொத்து கட்டி, மண் அடுப்பில் பொங்கல் வைப்பார்கள். தற்போது மண்பானையின் பயன்பாடு குறைந்து பித்தளை, அலுமினியம், குக்கர் போன்ற பாத்திரங்கள் அதிக அளவில் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. இருப்பினும் பொங்கல் பண்டிகையன்று மண் பானையில் பொங்கலிடுவதை தமிழர்கள் இன்றும் பாரம்பரியமாக கடைப்பிடித்து வருகின்றனர். மண்பாண்டங்களின் பயன்பாடுகள் குறைந்துவிட்டதால், மண்பாண்ட தொழிலாளர்கள் நலிவடைந்து அந்த தொழிலை விட்டு வேறு தொழில்களில் ஈடுபட தொடங்கிவிட்டனர்.
மண் பானை
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 23 நாட்களே உள்ள நிலையில் ஒரு சில மண்பாண்ட தொழிலாளர்கள் மண் பானை மற்றும் அடுப்பு தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். நாகை அருகே பாப்பாகோவில், நாகூர் குயவர்தெரு உள்ளிட்ட பகுதிகளில் மண்பாண்ட தொழிலாளர்கள் மண் பானை, மண் அடுப்பு, சட்டி உள்ளிட்ட பொருட்களை தயாரித்து வருகின்றனர். 
இங்கு தயாரிக்கப்படும் மண்பாண்டங்கள் நாகை, நாகூர், மஞ்சக்கொல்லை, புத்தூர், பாப்பாகோவில், திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்காக எடுத்து செல்லப்படுகிறது. 
இதுகுறித்து பாபா கோவிலில் பாரம்பரியமாக மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டுவரும் மண்பாண்ட தொழிலாளி சிவகுமார் கூறியதாவது:-
நலிவடைந்து வருகிறது
பித்தளை, அலுமினியம், குக்கர் போன்ற பாத்திரங்கள் அதிக அளவில் பயன்பாட்டிற்கு வந்து விட்டதால் மண்பாண்ட தொழில் நலிவடைந்து வருகிறது. மண்பாண்ட பொருட்கள் தயார் செய்ய முக்கிய தேவையான களிமண் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழை காரணமாக மண்பானை மற்றும் அடுப்புகளை சுட வைக்கோல் கிடைக்கவில்லை.
கடந்த ஆண்டு ரூ.100-க்கு விற்ற ஒரு கட்டு வைக்கோல் தற்போது ரூ.300-க்கு கூட கிடைப்பது இல்லை. இதற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே மண் பானை, அடுப்பை சூளையில் போட்டு சுட முடியாமல் சிரமப்பட்டு வருகிறோம். மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தால் மண்பானை வழக்கத்தை விட அதிக விலைக்கு விற்பனை செய்தால் தான் லாபம் கிடைக்கும். விலையை அதிகப்படுத்தினால் வாங்குவதில் வாடிக்கையாளர்கள் சுணக்கம் அடைகின்றனர். இதனால் வேறு வழியின்றி வாடிக்கையாளர்கள் கேட்கும் விலைக்கு குறைவாக விற்பனை செய்ய  வேண்டிய நிலை உள்ளது. இதனால் பெரும் நஷ்டம் அடைகிறோம்.
மானியத்தில் கடன்
 மண்பாண்ட தொழிலை விட்டால் எங்களுக்கு வேறு தொழில் தெரியாது. எனவே நலிவடைந்து வரும் மண்பாண்ட தொழிலாளர்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். மானியத்தில் வங்கி கடன் மற்றும் தொழிலுக்கு தேவையான மண் எடுக்க அனுமதிக்க வேண்டும் என தொடர்ந்து தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வருகினறனர்.  இவ்வாறு அவர் கூறினார்.
நாகையில் மண் அடுப்புகள் ரூ.100, ரூ.150, ரூ.200 வரையும், பானைகள் ரூ.80, ரூ.100, ரூ.120, ரூ.150, ரூ.200 வரை அளவுக்கு ஏற்றார்போல் விற்பனை செய்யப்படுகின்றன.

Next Story