படகுகளை ஆய்வு செய்யும் புதிய முறைக்கு மீனவர்கள் எதிர்ப்பு

ஆண்டுக்கு ஒருமுறை விசை படகுகள் மற்றும் நாட்டு படகுகளை ஆய்வுக்கு உட்படுத்தும் புதிய முறைக்கு மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நாகர்கோவில்:
ஆண்டுக்கு ஒருமுறை விசை படகுகள் மற்றும் நாட்டு படகுகளை ஆய்வுக்கு உட்படுத்தும் புதிய முறைக்கு மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம்
குமரி மாவட்ட மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, பத்மநாபபுரம் உதவி கலெக்டர் அலர்மேல்மங்கை, மீன்வளத் துறை துணை இயக்குனர் காசிநாத பாண்டியன், உதவி இயக்குனர் மோகன்ராஜ் மற்றும் அதிகாரிகள், மீனவர்கள் மற்றும் மீனவர்கள் சங்கங்களின் சார்பில் குறும்பனை பெர்லின், இனயம்புத்தன்துறை விமல்ராஜ், சி.ஐ.டி.யு. அந்தோணி, அலெக்சாண்டர், அன்னைநகர் ஜோன்ஸ், தூத்தூர் ஜான் அலோசியஸ், பள்ளம் அந்தோணி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அரசுக்கு நன்றி
கூட்டம் தொடங்கியதும் மீன்வள கல்லூரிகளில் பி.எப்.எஸ்சி. படிப்புகளுக்கு ஏற்கனவே மீனவர்களுக்கு 5 சதவீதமாக (அதாவது மொத்த இடங்களில் 6 இடங்கள்) இடஒதுக்கீடு இருந்தது. எங்களது கோரிக்கையின் அடிப்படையில் 20 சதவீத இட ஒதுக்கீடாக அதிகரித்து (அதாவது 24 இடங்கள்) உத்தரவிட்ட முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்து கொள்வதாக மீனவர்கள் கூறினர். பின்னர் தொடர்ந்து விவாதம் நடைபெற்றது. அதன் விவரம் வருமாறு:-
மீனவர்களின் விசைப்படகுகள், நாட்டு படகுகளை ஆய்வு செய்யும் நடைமுறை என்பது ஏற்கனவே 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை மீன்வளத்துறை அதிகாரிகள் வந்து ஆய்வு செய்வார்கள். ஆனால் அதை இந்த ஆண்டு முதல் ஆண்டுக்கு ஒருமுறை என்று மாற்றியிருக்கிறார்கள். இந்த புதிய முறை என்பது மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மீன்வள மசோதாவின் ஒரு ஷரத்து ஆகும். அதை மாநில அரசு அமல்படுத்துகிறது. இதற்கு நாங்கள் எங்கள் எதிர்ப்பை பதிவு செய்கிறோம். எனவே இதை மாநில அரசு அமல்படுத்தக் கூடாது. பழைய நடைமுறையை அமல்படுத்த வேண்டும்.
தூர்வார வேண்டும்
40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சிங்காரவேலர் குடியிருப்பு திட்டத்தில் குமரி மாவட்டத்தில் மட்டும் 900 வீடுகள் உள்ளன. தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில் மிகவும் மோசமான நிலையில் உள்ள வீடுகளை ஆய்வு செய்து அறிக்கை தயாரித்து, அரசுக்கு அனுப்பி புதிய வீடுகள் கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடற்கரை கிராமங்களில் தூண்டில் வளைவு அமைக்கும் போது ஒரே சீராக இல்லாமல் அளவுகள் வேறுபடுவதால் சில மீனவ கிராமங்கள் வெகுவாக பாதிக்கப்படுகிறது. குறிப்பாக நீரோடி முதல் இரையுமன்துறை வரை ஒரே சீராக தூண்டில் வளைவு அமைக்கப்பட வேண்டும். குமரி மாவட்டத்தில் மிகப் பெரிய கால்வாயான ஏ.வி.எம். கால்வாயை தூர்வார வேண்டும்.
மாற்றக்கூடாது
மீனவ கிராமங்களில் கல்விக் கடன் வசூல் என்ற பெயரில் கந்து வட்டிக்காரர்கள் போல் சில வங்கிகள் செயல்படுகின்றன. எனவே இதை முறைப்படுத்த மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்களிலும் முறையாக மகாசபை கூட்டம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மீனவர்கள் தங்களது கோரிக்கைகளை தெரிவிப்பதற்காக நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு வருகிறார்கள். இவ்வாறு வரும் நேரங்களில் நாகர்கோவிலில் உள்ள மீன்வளத் துறை அலுவலகத்திற்கு சென்று தங்களது குறைகளை பதிவு செய்ய முடியும். எனவே அந்த அலுவலகத்தை இடமாற்றம் செய்யும் முடிவை உடனடியாக தமிழக அரசு கைவிட வேண்டும். இது குறித்து மாவட்ட கலெக்டர், தமிழக அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு மீனவர்கள் பேசினர்.
விசை படகுகள், நாட்டு படகுகளை ஆண்டுக்கு ஒருமுறை ஆய்வு செய்யும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மீனவர்களின் கோரிக்கை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story