உரிமம் பெறாமல் இறைச்சிக்கடைகள் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் கலெக்டர் எச்சரிக்கை

கடலூர் மாவட்டத்தில் உரிமம் பெறாமல் இறைச்சிக்கடைகள் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடலூர்,
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட அளவிலான ஆலோசனைக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில் உணவுபொருட்களில் கலப்படம் செய்வதை தடுத்தல், அதிகப்படியான செயற்கை வண்ணம் கலந்த உணவு பொருட்கள் கண்டறிந்து எச்சரிக்கை செய்து கைப்பற்றி அழித்தல் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் உபயோகப்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும், மீண்டும் பயன்படுத்துவதை தவிர்த்து அதனை பயோ டீசலாக மாற்ற ரூகோ திட்டத்தை அதிகளவில் நடைமுறைபடுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
வழக்கு
தொடர்ந்து கலெக்டர் பாலசுப்பிரமணியம் பேசுகையில், கடலூர் மாவட்டத்தில் பல்வேறு ஓட்டல்கள் மற்றும் பேக்கரிகளில் வியாபார நோக்கத்துடன் உபயோகப்படுத்திய எண்ணெயை உணவு பாதுகாப்பு துறையால் அனுமதிக்கப்படாத விற்பனையாளர்களுக்கு விற்பனை செய்வதாக பெறப்படும் புகார்கள் மீது உடன் கள ஆய்வு செய்யவும், தவறுகள் கண்டறிப்பட்டால் சம்மந்தப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது வழக்கு தொடர வேண்டும்.
‘உணவை வீணாக்காமல் பகிர்வோம்” மற்றும் ‘சர்க்கரை, உப்பு, கொழுப்பு இவற்றை சற்றே குறைப்போம்“ திட்டத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அனைத்து உணவகங்களிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பயன்படுத்த வேண்டும். மாவட்டத்தில் உள்ள பால் விற்பனையாளர்கள் பதிவு மற்றும் உரிமம் பெறாமல் பால் விற்பனை செய்யக்கூடாது. மேலும் பதிவு மற்றும் உரிமம் பெறாமல் இறைச்சி கடைகள் நடத்துவோர் மீது அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.இதில் துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) மீரா, வேளாண்மைதுறை இணை இயக்குனர் பாலசுப்பிரமணியன், மாவட்ட வழங்கல் அலுவலர் உதயகுமார், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் வெங்கடேசன், ஓருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் பழனி மற்றும் உணவு பாதுகாப்பு துறையின் நியமன அலுவலர் கைலாஷ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story