விக்கிரவாண்டி அருகே வாகனம் மோதி பங்கு தந்தை சாவு புத்தாண்டு பிரார்த்தனையில் பங்கேற்று திரும்பிய போது பரிதாபம்

விக்கிரவாண்டி அருகே புத்தாண்டு பிரார்த்தனையில் பங்கேற்று திரும்பிய போது வாகனம் மோதி பங்கு தந்தை உயிரிழந்தார்.
விக்கிரவாண்டி,
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள வேலந்தாங்கல் நரசாகுளத்தை சேர்ந்தவர் ஜான்சன் மரிய ஜோசப் (வயது 34). இவர் விழுப்புரம் புனித சவேரியார் தேவாலயத்தில் உதவி பங்கு தந்தையாக இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆங்கில புத்தாண்டு என்பதால், கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிராத்தனை மற்றும் திருப்பலி நடைபெற்றது. இதில் தும்பூர் கிராமத்தில் உள்ள தேவாலயத்தில் இரவு நடந்த திருப்பலியில் ஜான்சன் மரிய ஜோசப் பங்கேற்றார்.
அங்கு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு, இரவில் தனது மோட்டார் சைக்கிளில் விழுப்புரம் நோக்கி வந்து கொண்டிருந்தார். விக்கிரவாண்டி அடுத்த லட்சுமிபுரம் பஸ் நிறுத்தம் அருகே வந்த போது, எதிரே வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு, நிற்காமல் சென்றுவிட்டது.
வாகனம் மோதி சாவு
இதில் படுகாயமடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்த போது, ஜான்சன் மரிய ஜோசப் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது பற்றி அவரது தந்தை வனத்தையன் விக்கிரவாண்டி போலீசில், கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஞானசேகர் வழக்குப்பதிந்து விபத்தை ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகனம் குறித்து விசாரணை செய்து வருகிறார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story