தறிகெட்டு ஓடிய கார் மோதி 15 பேர் படுகாயம்
கொடைக்கானல் அருகே, தறிகெட்டு ஓடிய கார் மோதி 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானலுக்கு சுற்றுலா
ஈரோடு நகரில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் 8 வாலிபர்கள், கடந்த 1-ந்தேதி கொடைக்கானலுக்கு காரில் சுற்றுலா வந்தனர். இவர்கள், கொடைக்கானல் அட்டுவம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்து, புத்தாண்டை கொண்டாடினர்.
பின்னர் நேற்று காலை மீண்டும் ஈரோடு நோக்கி காரில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர். அந்த காரை, ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி கொட்டாப்புளிமேடு பகுதியை சேர்ந்த முருகன் (வயது 33) ஓட்டினார்.
தறிகெட்டு ஓடிய கார்
கொடைக்கானல்-வத்தலக்குண்டு சாலையில், வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது.
இதனை கண்டு சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் அலறியடித்து நாலாபுறமும் சிதறி ஓடினர். இருப்பினும், சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதியது.
இதுமட்டுமின்றி அங்கு நிறுத்தியிருந்த 3 மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி கார் நின்றது. மேலும் சாலையோர கடைகளும் சேதம் அடைந்தன. இந்த விபத்தில் நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த ஷேக் அப்துல் காதர் (20), ராணிப்பேட்டையை சேர்ந்த இசாக் (19), நிக்சன் (20), அவினாஷ் (19), திண்டுக்கல்லை சேர்ந்த சசிகலா (35), கபில்ராஜ் (13), கண்ணன் (32), பொன்னம்மாள் (32), பிரகதீஸ் (2), ரோகிணி (27), நெல்லையை சேர்ந்த மெர்சி (18), நவீன் சங்கர் (21), வனஜா (31) உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
15 பேருக்கு சிகிச்சை
இதுகுறித்து தகவல் அறிந்த கொடைக்கானல் போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்த 15 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 8 பேரும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story