கணவரால் விரட்டப்பட்ட ஒடிசா பெண் திண்டுக்கல்லில் மீட்பு


கணவரால் விரட்டப்பட்ட ஒடிசா பெண் திண்டுக்கல்லில் மீட்பு
x
தினத்தந்தி 4 Jan 2022 9:59 PM IST (Updated: 4 Jan 2022 9:59 PM IST)
t-max-icont-min-icon

கணவரால் விரட்டப்பட்ட ஒடிசா பெண்ணை திண்டுக்கல்லில் போலீசார் மீட்டனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையிலான போலீசார் நேற்று ஆர்.எம்.காலனி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது மின் மயானம் அருகே ஒரு பெண் தனியாக சுற்றித்திரிந்தார். அதை பார்த்து சந்தேகம் அடைந்த போலீசார், அந்த பெண்ணை அழைத்து விசாரித்தனர். ஆனால் தமிழ் தெரியாத அவர், வேறு மொழியில் பேசினார். இதையடுத்து அந்த பெண்ணை போலீசார் மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

மேலும் சமூக நலத்துறையின் சகி ஒருங்கிணைந்த சேவை மையத்துக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சகி ஒருங்கிணைந்த சேவை மைய பணியாளர்கள் விரைந்து வந்து பெண்ணிடம் விசாரித்தனர். 

அப்போது அந்த பெண் ஒடிசாவை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து ஒடியா மொழி தெரிந்த நபரை வரவழைத்து, அந்த பெண்ணிடம் பேச வைத்தனர். அதில் அந்த பெண்ணின் பெயர் பவுனிமா (வயது 45) என்பது தெரியவந்தது.
மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பவுனிமா தனது கணவர், குழந்தையுடன் ரெயிலில் திண்டுக்கல்லுக்கு வந்து உள்ளார். இங்கு வந்ததும் பிரச்சினை ஏற்பட்டு கணவர் குழந்தையை பிடுங்கி கொண்டு அவரை விரட்டி விட்டுள்ளார். இதனால் வழி தெரியாமல் 3 நாட்களாக அவர் சாலையில் சுற்றித்திரிவது தெரியவந்தது. 

ஆனால் கணவர் இருக்கும் இடம் உள்ளிட்ட இதர விவரம் அவருக்கு தெரியவில்லை. எனினும் பவுனிமாவின் கணவரை கண்டுபிடித்து சேர்த்து வைக்கும் முயற்சியில் சகி ஒருங்கிணைந்த சேவை மையத்தினர் ஈடுபட்டு உள்ளனர்.

Next Story