ஈரோட்டில் தனியார் பள்ளி வாகனங்களை ஆர்.டி.ஓ. ஆய்வு


ஈரோட்டில் தனியார் பள்ளி வாகனங்களை ஆர்.டி.ஓ. ஆய்வு
x
தினத்தந்தி 5 Jan 2022 3:14 AM IST (Updated: 5 Jan 2022 3:14 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் தனியார் பள்ளிக்கூட வாகனங்களை ஆர்.டி.ஓ. ஆய்வு செய்தார்.

ஈரோடு
ஈரோட்டில் தனியார் பள்ளிக்கூட வாகனங்களை ஆர்.டி.ஓ. ஆய்வு செய்தார்.
பள்ளிக்கூட வாகனங்கள்
தமிழகத்தில் தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் மாணவ-மாணவிகளை ஏற்றி செல்வதற்காக பஸ் மற்றும் வேன் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த வாகனங்களினால் மாணவ-மாணவிகளுக்கு விபத்து ஏற்படாத வகையில் பாதுகாப்பு அம்சங்கள் முறையாக பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. இதில் வாகனங்களில் மாணவ-மாணவிகள் அமர்ந்து செல்ல பாதுகாப்பான இருக்கைகள், அவசர கால வழிகள், தீயணைப்பு கருவிகள், கண்காணிப்பு கேமராக்கள், பள்ளிக்கூட வாகனங்களை அடையாளப்படுத்துவதற்காக லோகோ, போலீசார் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளின் செல்போன் எண்களை எழுதி வைத்தல் உள்ளிட்டவற்றை முறையாக செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அரசு உத்தரவின்படி பாதுகாப்பு அம்சங்கள் முறையாக பின்பற்றப்பட்டு உள்ளதா? என்று ஆண்டுதோறும் அதிகாரிகள் முன்னிலையில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, பெருந்துறை ஆகிய வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு உள்பட்ட பள்ளிக்கூட வாகனங்களை ஆய்வு செய்யும் பணி ஈரோடு ஏ.இ.டி. பள்ளிக்கூட வளாகத்தில் நேற்று நடந்தது. இதையொட்டி பள்ளிக்கூட பஸ்கள், வேன்கள் அங்கு வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
தணிக்கை
ஈரோடு ஆர்.டி.ஓ. பிரேமலதா தலைமையில் வட்டார போக்குவரத்து துணை ஆணையாளர் ரவிசந்திரன், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பிரதீபா, பதுவைநாதன், சக்திவேல் ஆகியோர் வாகனங்களை தணிக்கை செய்தனர். அப்போது பள்ளிக்கூட வேன், பஸ்களில் பாதுகாப்பு அம்சங்கள் முறையாக பின்பற்றப்பட்டு உள்ளதா? என்று பார்வையிட்டனர். வாகனத்தின் உரிமம் சான்று புதுப்பிக்கப்பட்டு உள்ளதா? வாகனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளதா? டிரைவருக்கு அருகில் தடுப்பு கம்புகள் பொருத்தப்பட்டு உள்ளதா? தீயணைப்பு கருவிகள் உள்ளதா? அது புதுப்பிக்கப்படுகிறதா? அவசர கால வழி செயல்படுகிறதா? உள்ளிட்டன குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 666 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
இந்த ஆய்வின்போது ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார், வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் சுகந்தி, பாஸ்கர், சிவக்குமார், கதிர்வேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story