7 டன் ரப்பர் ஷீட்கள் திருடிய பிரபல திருடன் கைது

குலசேகரம், பேச்சிபாறை பகுதிகளில் 7 டன் ரப்பர் ஷீட்டுகளை திருடிய பிரபல திருடனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கள்ளக்காதலியுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்ததும் அம்பலமானது.
குலசேகரம்:
குலசேகரம், பேச்சிபாறை பகுதிகளில் 7 டன் ரப்பர் ஷீட்டுகளை திருடிய பிரபல திருடனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கள்ளக்காதலியுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்ததும் அம்பலமானது.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
7 டன் ரப்பர் ஷீட்கள் திருட்டு
குலசேகரம், பேச்சிப்பாறை போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு ஆண்டாக வீடுகள், கடைகள், ரப்பர் உலர் நிலையங்கள் உள்ளிட்ட 13 இடங்களில் ரப்பர் ஷீட்டுகள், ஒட்டுப்பால் உள்ளிட்டவை திருட்டு போனது.
மேலும், தொலையாவட்டம், நட்டாலம் ஆகிய இடங்களில் 2 மோட்டார் சைக்கிள்கள், குலசேகரம் கொல்லாறை பகுதியில் ஒரு ஆடு ஆகியவை திருட்டு போனது. ரப்பர் ஷீட்டுகள் மட்டும் சுமார் 7 டன் திருட்டு போயிருப்பதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.
தனிப்படை அமைப்பு
இதையடுத்து சம்பவம் நடந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.அப்போது, முகமூடி மற்றும் கையுறை அணிந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இந்தநிலையில் தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபரை பிடிக்க தக்கலை துணை சூப்பிரண்டு கணேசன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.அதன்படி குலசேகரம் இன்ஸ்பெக்டர் உமா வழிகாட்டுதலில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் தலைமையிலான தனிப்படையினர் தீவிரமாக தேடி வந்தனர்.
வாலிபர் சிக்கினார்
இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு பொன்மனை அருகே குற்றியாணி பகுதியில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் போலீசாரை கண்டவுடன் மோட்டார்சைக்கிளை போட்டு விட்டு ரப்பர் தோட்டத்துக்குள் ஓடி மறைந்து கொண்டார்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை விரட்டிப் பிடித்து குலசேகரம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் திற்பரப்பு நக்கறாண்டிவிளையைச் சேர்ந்த அச்சுதன் மகன் ஜெகன் (வயது 35) என்பது தெரியவந்தது.
பிரபல திருடன்
மேலும், அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.
அதன் விவரம் வருமாறு:-
திற்பரப்பு, மாஞ்சக்கோணம், சூரியகோடு, அண்டூர், திருநந்திக்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரப்பர் உலர் நிலையங்கள், கடைகள், வீடுகளில் புகுந்து ரப்பர் ஷீட்கள், ரப்பர் ஒட்டுப்பால், மோட்டார் சைக்கிள்கள், ஒரு ஆடு ஆகியவற்றை திருடிய பிரபல திருடன் என்பதும், முகமூடி அணிந்தபடி நள்ளிரவு மக்கள் அயர்ந்து தூங்கும் 1 மணி முதல் 2 மணிக்குள் கைவரிசை காட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளதும் தெரியவந்தது.
கள்ளக்காதலியுடன் உல்லாச வாழ்க்கை
மேலும், ஜெகனுக்கும் அரமன்னம் பகுதியில் கணவனை பிரிந்து வாழும் 32 வயது இளம்பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருப்பதும், திருட்டு பொருட்களை விற்று கள்ளக்காதலியுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது. அதைதொடர்ந்து தனிப்படை போலீசார் ஜெகனை கைது செய்தனர்.
இதையடுத்து ஜெகன் ரப்பர் ஷீட்டுகளை விற்பனை செய்த கடைகளில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், திருட்டு போன பொருட்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, திருடன் கைது செய்யப்பட்டதை அறிந்து திருட்டு போன பொருட்களின் உரிமையாளர்கள் நேற்று மாலை குலசேகரம் போலீஸ் நிலையம் முன் திடீரென திரண்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story