கடம்பூர் மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் தரை இறங்கியது


கடம்பூர் மலைப்பகுதியில்  ஹெலிகாப்டர் தரை இறங்கியது
x
தினத்தந்தி 8 Jan 2022 9:12 PM IST (Updated: 8 Jan 2022 9:12 PM IST)
t-max-icont-min-icon

சத்தியமங்கலம் அருகே மோசமான வானிலை காரணமாக கடம்பூர் மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் தரை இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

சத்தியமங்கலம் அருகே மோசமான வானிலை காரணமாக கடம்பூர்  மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் தரை இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
கடம்பூர் மலைப்பகுதி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்து கடம்பூர் மலைப்பகுதி உள்ளது. அடர்ந்த வனப்பகுதிகளை கொண்ட இந்த மலைப்பகுதியானது சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் அமைந்து உள்ளது.  கடல் மட்டத்தில் இருந்து கடம்பூர் மலைப்பகுதி 700 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
மேலும் கடம்பூர் மலைப்பகுதியில் 30-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன.
தொழில் அதிபர்
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் பாரத் (வயது 60). இவர் தகவல் தொழில் தொடர்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ஷீலா (45). இவருக்கு கண்ணில் அறுவை சிகிச்சை செய்ய கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதி பெறப்பட்டிருந்தது. மேலும் கேரள மாநிலத்தில் பாரத் ஆயுர்வேத சிகிச்சை மேற்கொள்ளவும் விரும்பினார். 
இதைத்தொடர்ந்து பாரத் தனது மனைவியுடன் தனியார் ஹெலிகாப்டரில் பெங்களூருவில் இருந்து கொச்சிக்கு நேற்று புறப்பட்டார். 
பனி மூட்டம்
ஹெலிகாப்டரை கேப்டன் ஜஸ்பால் இயக்கினார். அவருக்கு உதவியாக என்ஜினீயர் அங்கித் சிங் இருந்தார். 4 பேருடன் புறப்பட்ட ஹெலிகாப்டரானது ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் மலைப்பகுதியில் நேற்று பகல் 11.15 மணி அளவில் வானில் பறந்து கொண்டிருந்தது. கடம்பூர் மலைப்பகுதியில் கடும் பனி மூட்டம் மற்றும் மோசமான வானிலை நிலவியதாக கூறப்படுகிறது. இதனால் ஹெலிகாப்டரை கேப்டன் ஜஸ்பாலால் மேற்கொண்டு இயக்குவதில் சிரமம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து அவர் கடம்பூ்ா மலைப்பகுதியில் ஹெலிகாப்டரை தரை இறக்க முடிவு செய்தார். 
தாழ்வாக பறந்தது
ஆனால் மலைப்பாங்கான இடமாக இருந்ததால் ஹெலிகாப்டரை தரை இறக்குவதில் கேப்டனுக்கு சிரமம் ஏற்பட்டது. இதன்காரணமாக ஹெலிகாப்டர் கடம்பூர் மலைப்பகுதியில் தாழ்வாக பறக்க தொடங்கியது. 
இதைக்கண்டதும் மலைவாழ் மக்கள் ஆச்சரியத்துடன் ஹெலிகாப்படரை ேவடிக்கை பார்க்க தொடங்கினர். பலர் தங்களுடைய செல்போனில் வீடியோ எடுத்தனர். 
விபத்து தவிர்ப்பு
இதற்கிடையே கேப்டன் ஜஸ்பால் கடம்பூர் மலைப்பகுதியில் அத்தியூர் கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் சோளக்கதிர் அடிக்கும் சமதள களத்தை கண்டார். 
உடனே அவர் அதிரடியாக செயல்பட்டு ஹெலிகாப்டரை சோளக்கதிர் அடிக்கும் களத்தில் ெமதுவாக தரை இறக்கினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 
உயிர் தப்பினர்
இதன்காரணமாக பாரத், அவருடைய மனைவி ஷீலா, கேப்டன் ஜஸ்பால், என்ஜினீயர் அங்கித் சிங் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 
தரை இறங்கியதை கண்டதும் மலைவாழ் மக்கள் ஹெலிகாப்டரை சூழ்ந்து வேடிக்கை பார்க்க தொடங்கினர். மேலும் இந்த தகவல் அருகில் உள்ள மலைக்கிராமங்களுக்கும் பரவியது. அந்த கிராமங்களை சேர்ந்த மலைவாழ் மக்களும் அத்தியூருக்கு திரண்டு வந்து ஹெலிகாப்டரை வேடிக்கை பார்த்தனர். பின்னர் மலைவாழ் மக்கள் அங்கிருந்த ஹெலிகாப்டரை செல்போன் மூலம் படம் எடுத்தும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். 
பரபரப்பு
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கடம்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஹெலிகாப்டர் தரை இறங்கியது குறித்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் பனி மூட்டம் மதியம் 1.30 மணி அளவில் முழுவதும் நீங்கியது. இதைத்தொடர்ந்து 2 மணிநேரத்து பிறகு அந்த ஹெலிகாப்டர் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
பனி மூட்டம் மற்றும் மோசமான வானிலை காரணமாக மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் அவசரமாக தரை இறங்கிய சம்பவம் கடம்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story