ஆவின் உற்பத்தி மையங்களில் முறைகேடான பணி நியமனம் குறித்து விசாரிக்கப்படுகிறது பவானியில் அமைச்சர் நாசர் பேட்டி


ஆவின் உற்பத்தி மையங்களில் முறைகேடான பணி நியமனம் குறித்து விசாரிக்கப்படுகிறது பவானியில் அமைச்சர் நாசர் பேட்டி
x
தினத்தந்தி 8 Jan 2022 9:41 PM IST (Updated: 8 Jan 2022 9:41 PM IST)
t-max-icont-min-icon

ஆவின் உற்பத்தி மையங்களில் முறைகேடான பணி நியமனம் குறித்து விசாரணை நடந்து வருகிறது என்று பவானியில் அமைச்சர் நாசர் கூறினார்.

ஆவின் உற்பத்தி மையங்களில் முறைகேடான பணி நியமனம் குறித்து விசாரணை நடந்து வருகிறது என்று பவானியில் அமைச்சர் நாசர் கூறினார்.
பணி நியமனம்
ஈரோடு சென்னிமலை ரோட்டில் ஆவின் நிறுவனத்தின் கால்நடை கலப்பு தீவன உற்பத்தி ஆலை உள்ளது. இந்த ஆலையில் தற்போது தினமும் 150 டன் கால்நடை கலப்பு தீவனம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனை 300 டன் உற்பத்திக்கான ஆலையாக மாற்றி வருகிற 19-ந்தேதி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைக்க உள்ளார்.
இதற்கான  பணிகளை பார்வையிடுவதற்காக பால் வளத்துறை அமைச்சர் நாசர் நேற்று ஈரோடு வந்தார். செல்லும் வழியில் அவர் சித்தோடு ஆவின் ஒன்றியத்துக்கு சென்று பால் குளிரூட்டும் முறை, பால் பவுடர் உற்பத்தி, வெண்ணெய் உற்பத்தி மையம், ஆவின் விற்பனை மையம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-
பழிவாங்கவில்லை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பால் உற்பத்தியாளர்களுக்கு போனஸ் வழங்கப்படும். ஆவின் உற்பத்தி மையங்களில் கடந்த ஆட்சிக்காலத்தில் முறைகேடாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டது. இதில் 256 பேரின் நியமன ஆணை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இன்னும் 700 பேரின் பணி நியமனம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
அ.தி.மு.க.வை சார்ந்த விஜய நல்லதம்பி, ரவீந்திரன் ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டார். உப்பைத் தின்றவர் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும். அவர் மீது தி.மு.க. பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கவில்லை.
அதிக பால் கொள்முதல்
அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 41 லட்சம் லிட்டர் பால் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
அனைத்து கோவில்களுக்கும் ஆவின் பொருட்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என தமிழக முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். உலகம் முழுவதும் வசிக்கும் தமிழ் மக்களும் ஆவின் பொருட்களை அதிக அளவில் விரும்புகின்றனர். இதற்காக விரைவில் கலிபோர்னியா மாகாணம் மற்றும் சிங்கப்பூருக்கும் அடுத்த 10 நாட்களுக்குள் மீண்டும் பால் உற்பத்தி பொருட்கள், பால் பவுடர் ஆகியவை ஏற்றுமதி செய்யப்படும்.
இவ்வாறு அமைச்சர் நாசர் கூறினார்.
பணியாளர்கள் கோரிக்கை
பின்னர் ஈரோடு மாவட்ட ஆவின் பால் குளிரூட்டும் நிலைய பணியாளர்கள் நல சங்கத்தின் சார்பில் அமைச்சரிடம் ஒரு மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில் அவர்கள் கூறி இருப்பதாவது:-
 பாலின் தரம், பாதுகாப்பு நேரம் ஆகியவற்றுக்கு உரிய ஒப்புதல் ரசீதை பால் கூட்டுறவு உற்பத்தியாளர்கள் ஒன்றியம் வழங்குவது இல்லை. இதனால் புதிய மற்றும் குறைந்த அளவு பால் விற்பனை செய்யும் சங்கங்களுக்கு அதிக அளவில் இழப்பு ஏற்படுகிறது. எனவே பாலின் அளவு, பாலின் தரம், பாலின் பாதுகாப்பு நேரம் ஆகியவற்றுக்கான ரசீதை ஆவின் ஒன்றிய நிர்வாகம் ஒவ்வொரு சங்கத்திற்கும் வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி உள்ளனர்.
ஆய்வின்போது அமைச்சருடன் ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, அந்தியூர் தொகுதி ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ., ஆவின் கூட்டுறவு ஒன்றிய குழு உறுப்பினர் என்.ஆர்.கோவிந்தராஜர், பவானி  நகர தி.முக. செயலாளர் நாகராஜன், எஸ்.வி.எஸ்.மாட்டுத்தீவன உரிமையாளர் துரை உள்ளிட்டோர் சென்றனர்.

Next Story