வில்லியனூரில் புதுமாப்பிள்ளை குத்தி கொலை


வில்லியனூரில் புதுமாப்பிள்ளை குத்தி கொலை
x
தினத்தந்தி 9 Jan 2022 10:16 PM IST (Updated: 9 Jan 2022 10:16 PM IST)
t-max-icont-min-icon

வில்லியனூரில் பொதுமக்களுக்கு இடையூறாக திருமண விழா கொண்டாடியதை தட்டிக்கேட்ட புதுமாப்பிள்ளை குத்தி படுகொலை செய்யப்பட்டார்.

வில்லியனூர், ஜன.
வில்லியனூரில் பொதுமக்களுக்கு இடையூறாக திருமண விழா கொண்டாடியதை தட்டிக்கேட்ட புதுமாப்பிள்ளை குத்தி படுகொலை செய்யப்பட்டார்.
திருமண நாள் கொண்டாட்டம்
வில்லியனூர் மூர்த்தி நகரை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் சதீஷ் என்கிற மணிகண்டன் (வயது 28). ஏ.சி. மெக்கானிக். இவருக்கு கடந்த 4 மாதத்துக்கு முன் மதிவதனா (25) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.
நேற்று முன்தினம் இரவு சதீசின் எதிர் வீட்டை சேர்ந்த சங்கர் (32), அவரது மனைவி ரமணி (28) ஆகியோர் அவர்களது திருமண நாளை தெருவில் கேக் வெட்டி கொண்டாடினர். அப்போது ரமணியின் தம்பி ராஜா மற்றும் அவரது நண்பர்களான தென்னல் பகுதியை சேர்ந்த அசார், சாமியார்தோப்பு தமிழ்செல்வன் ஆகியோர் மதுகுடித்து விட்டு பொதுமக்களுக்கு இடையூறாக தகாத வார்த்தைகளால் பேசிக்கொண்டு பார்ட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
குத்திக்கொலை
இதனை சதீஷ் மற்றும் அப்பகுதியை சேர்ந்த சபரி, ஹரி, ராஜவேல் ஆகியோர் தட்டிக்கேட்டனர். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
பின்னர் சிறிது நேரம் கழித்து சதீஷ் தனது வீட்டின் அருகில் நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது ராஜா, சங்கர், அசார், தமிழ்செல்வன் ஆகியோர் சதீசை கத்தியால் கழுத்து, வயிற்றில் சரமாரியாக குத்தினர். அவரது அலறல் சத்தம் கேட்டு சதீசின் மனைவி மதிவதனா மற்றும் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். இதை பார்த்த கொலை கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.
இதையடுத்து ஆபத்தான நிலையில் இருந்த சதீசை மீட்டு உறவினர்கள் உடனடியாக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி சதீஷ் நள்ளிரவில் பரிதாபமாக இறந்துபோனார். இதை கேட்டு அவரது மனைவி மதிவதனா மற்றும் குடும்பத்தினர் கண்ணீர்விட்டு கதறி அழுதனர்.
2 பேர் சிக்கினர்
இந்த படுகொலை குறித்து தகவல் அறிந்த வில்லியனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 
இந்த படுகொலையில் தொடர்புடையதாக கருதி 2 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களை தொடர்ந்து தேடி வருகின்றனர்.
சதீஷ் கொலையில் தொடர்புடைய ராஜா, தமிழ்செல்வன், அசார் ஆகியோர் மீது வில்லியனூர் போலீசில் ஏற்கனவே வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
உறவினர்கள் சாலைமறியல்
இந்தநிலையில் நேற்று மதியம் 2 மணியளவில் சதீசின் உறவினர்கள், பிரேத பரிசோதனை செய்யப்பட்ட அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வில்லியனூர் - கூடப்பாக்கம் சாலையில் சதீசின் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதை அறிந்த வில்லியனூர் எம்.எல்.ஏ.வும் எதிர்கட்சி தலைவருமான சிவா, மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன் மற்றும் போலீசார் விரைந்து வந்து சாலைமறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சிவா எம்.எல்.ஏ. பேச்சுவார்த்தை
அப்போது அவர்கள், சதீசை கொலை செய்த ரவுடிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும், சாதாரண தகராறுக்காக கொலையில் ஈடுபடும் இதுபோன்ற ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். 
இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக சிவா எம்.எல்.ஏ. மற்றும் போலீஸ் அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story