இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 9 மீனவர்கள் சொந்த ஊர் வந்தனர்

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட மண்டபத்தைச் சேர்ந்த 12 மீனவர்களில் 9 பேர் மட்டும் சொந்த ஊர் வந்தனர். 3 பேருக்கு கொரோனா உறுதியானதால் அவர்கள் நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
பனைக்குளம்,
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட மண்டபத்தைச் சேர்ந்த 12 மீனவர்களில் 9 பேர் மட்டும் சொந்த ஊர் வந்தனர். 3 பேருக்கு கொரோனா உறுதியானதால் அவர்கள் நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
12 மீனவர்கள் விடுவிப்பு
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் தெற்கு துறைமுக பகுதியில் இருந்து கடந்த 20-ந்தேதி அன்று விசைப்படகுகளில் தென்கடல் பகுதியான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றிருந்தனர். இதில் 2 படகுகள் மற்றும் 12 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து அந்நாட்டு சிறையில் அடைத்தனர்.
இதனிடையே அந்த 12 மீனவர்களும் கடந்த 5-ந்தேதி மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது மீனவர்களை விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
கலெக்டர் ஆறுதல்
இந்த நிலையில் இலங்கை சிறையிலிருந்து வெளியே வந்த மண்டபத்தைச் சேர்ந்த 12 மீனவர்களில் 9 பேர் மட்டும் இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னையில் நேற்று 9 மீனவர்களும் மீன்வளத்துறை ஏற்பாட்டின் பேரில் ராமநாதபுரம் அழைத்து வரப்பட்டனர்.
அவர்களை கலெக்டர் சங்கர்லால் குமாவத் சந்தித்து ஆறுதல் கூறினார். உடன் மீன்வளத்துறை துணை இயக்குனர் காத்தவராயன், மண்டபம் உதவி இயக்குனர் அப்துல் காதர் ஜெய்லானி உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர்.
3 பேருக்கு கொரோனா
இதுபற்றி மண்டபம் மீன்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 12 மீனவர்களை சொந்த நாட்டிற்கு அனுப்பும் முன்பு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 3 மீனவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதனால் அந்த 3 மீனவர்களும் காங்கேசன்துறை கடற்படை முகாமில் கடற்படையினரின் கண்காணிப்பில் தனிமையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மற்ற 9 மீனவர்கள் விமானம் மூலம் அழைத்து வரப்பட்டு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளனர். இலங்கையில் தங்க வைக்கப்பட்டுள்ள மற்ற 3 மீனவர்கள் உடல்நிலை சரியான பின்னர் சொந்த ஊருக்கு அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மண்டபம் மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களது 2 விசைப்படகுகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story