ராணிப்பேட்டை நகராட்சியில் முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி

ராணிப்பேட்டை நகராட்சியில் முன் கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை நகராட்சியில் முன் கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்.
பூஸ்டர் தடுப்பூசி
சுகாதாரப் பணியாளர்கள் முன் கள பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் முன் கள பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோயுள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று ராணிப்பேட்டை நகராட்சியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, தடுப்பூசி செலுத்தும் பணியினை தொடங்கி வைத்தார்.
2 டோஸ் செலுத்தியவர்களுக்கு
முதல் மற்றும் இரண்டாம் தடுப்பூசியினை செலுத்திக் கொண்ட தகுதியான முன் களப்பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ள பொதுமக்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மாவட்டத்தில் 7 வட்டாரங்களில் உள்ள 4,259 சுகாதாரப் பணியாளர்கள், 21,397 முன் களப்பணியாளர்கள், மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட 1,36,793 பேருக்கு இந்த பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
இவர்கள் அனைவரும் கட்டாயம் 2 தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டிருக்கவேண்டும் என்று அமைச்சர் காந்தி, கலெக்டரை கேட்டு கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை இணை இயக்குனர் மணிமாறன், ராணிப்பேட்டை நகராட்சி ஆணையாளர் ஏகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story