ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.10 லட்சத்தை இழந்தவர் தற்கொலை


ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.10 லட்சத்தை இழந்தவர் தற்கொலை
x
தினத்தந்தி 11 Jan 2022 12:35 AM GMT (Updated: 2022-01-11T06:05:54+05:30)

ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.10 லட்சத்தை இழந்தவர், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பூந்தமல்லி,

சென்னை கோயம்பேடு, சீமாத்தம்மன் நகர், முல்லை தெருவைச் சேர்ந்தவர் தினேஷ் (வயது 41). இவர், கோயம்பேடு, சின்மயா நகரில் கம்ப்யூட்டர் பிரவுசிங் சென்டர் வைத்து நடத்தி வந்தார். இவருடைய மனைவி நளினி (33). இவர்களுக்கு அனிதா ஸ்ரீ (13) என்ற மகளும், ஆதவன் (9) என்ற மகனும் உள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு அனைவரும் சாப்பிட்டுவிட்டு தூங்கிவிட்டனர். ேநற்று அதிகாலையில் நளினி எழுந்து பார்த்தபோது தினேஷ் வீட்டின் ஹாலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

ஆன்லைன் சூதாட்டம்

இதுகுறித்து தகவல் அறிந்துவந்த கோயம்பேடு போலீசார், தூக்கில் தொங்கிய தினேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் நடத்திய விசாரணையில், ஆன்லைன் சூதாட்டத்தில் அதிக ஈடுபாடு கொண்ட தினேஷ், அதில் ரூ.10 லட்சம் வரை இழந்து விட்டதாக தெரிகிறது. அத்துடன் தொழில் நஷ்டம் காரணமாக பலரிடம் கடன் வாங்கியதாகவும், இவருக்கு சிலர் பணம் கொடுக்க வேண்டிய நிலையில் பணத்தை தராமல் அவர்கள் ஏமாற்றியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட விரக்தியில் தினேஷ், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story