பொங்கல் பொருட்கள் வாங்க கடை வீதிகளில் மக்கள் கூட்டம்


பொங்கல் பொருட்கள் வாங்க கடை வீதிகளில் மக்கள் கூட்டம்
x
தினத்தந்தி 13 Jan 2022 2:15 AM IST (Updated: 13 Jan 2022 2:15 AM IST)
t-max-icont-min-icon

பொங்கல் பண்டிகை நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி குமரி மாவட்டத்தில் பொங்கல் பொருட்கள் வாங்க கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

நாகர்கோவில், 
பொங்கல் பண்டிகை நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி குமரி மாவட்டத்தில் பொங்கல் பொருட்கள் வாங்க கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
பொங்கல் பண்டிகை
தமிழ் மாதங்களில் ஒன்றான தை மாதம் தமிழக மக்களின் சிறப்புக்குரிய மாதமாக கருதப்பட்டு வருகிறது. அதோடு தை பிறந்தால் வழி பிறக்கும் என்றும் முன்னோர்களால் கூறப்படுவது உண்டு. இத்தகைய தை மாத பிறப்பை பொங்கல் திருநாளாக தமிழர்கள் ஆண்டாண்டு காலமாக கொண்டாடி வருகிறார்கள். மேலும் பொங்கல் பண்டிகை அறுவடை திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான பொங்கல் பண்டிகை நாளை (வெள்ளிக்கிழமை) வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் பொதுமக்கள் அதிகாலையிலேயே எழுந்து குளித்து, புத்தாடைகள் அணிந்து வீட்டு வாசலில் வண்ணக் கோலமிட்டு பொங்கலிட்டு மகிழ்வார்கள்.
அலைமோதிய கூட்டம் 
இதனையொட்டி கடந்த சில நாட்களாக கடை வீதிகளில் பொங்கலுக்கு தேவையான பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது. இதே போல நேற்றும் கூட்டம் அலைமோதியது. நாகர்கோவில் வடசேரி சந்தை, ஒழுகினசேரி அப்டா மார்க்கெட், கோட்டார் மார்க்கெட் மற்றும் வடிவீஸ்வரம், வடசேரி அண்ணா சிலை சந்திப்பு பகுதி உள்ளிட்டவற்றில் அமைக்கப்பட்டு இருந்த தற்காலிக கடைகளில் ஆண்களும், பெண்களுமாக ஏராளமானோர் குவிந்தனர்.
பொங்கலுக்கு தேவையான கரும்பு, மஞ்சள் குலைகள், மலர்கள், பொங்கலிட பயன்படுத்தும் மண்பானைகள், வண்ணக் கோலமிட பல வண்ணங்களில் விற்பனை செய்யப்பட்ட கோலப்பொடிகள் போன்றவற்றை தேவையான அளவில் வாங்கிச் சென்றனர். பொங்கலிட தேவையான பனை ஓலைகள் விற்பனையும் மும்முரமாக நடந்தது. இதற்காக கடை வீதிகள், சந்தைகளில் கரும்புகள் மற்றும் பனங்கிழங்குகள் கட்டு, கட்டாக குவித்து வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கட்டு கரும்பு ரூ.550-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதுவே பனங்கிழங்கு ஒரு கட்டு ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனை ஆகியது.
மேலும் பொங்கல் பண்டிகையையொட்டி காய்கறிகள் மற்றும் கிழங்கு வகைகளும் விற்பனைக்காக குவிந்துள்ளன. வடசேரி சந்தைக்கு சிறு கிழங்கு, சேனை கிழங்கு, சேம்பு, கருணை கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்ட கிழங்கு வகைகளின் வரத்து அதிகமாக உள்ளது. அங்கு சேனை கிழங்கு ஒரு கிலோ ரூ.30-க்கு விற்பனை ஆகியது. இதே போல சேம்பு- ரூ.60, சிறு கிழங்கு- ரூ.60 முதல் ரூ.80, சீனி கிழங்கு- ரூ.40 என்ற வகையிலும் விற்பனை செய்யப்பட்டது.
வாகன நெரிசல்
இதே போல தலைப்பொங்கல் கொண்டாடும் தம்பதிகளுக்கு பெண் வீட்டார் புத்தாடைகள், இனிப்புகள், தங்க நகைகள் மற்றும் சீர்வரிசை பொருட்கள் வாங்குவதற்காக ஜவுளி கடைகள், இனிப்பு கடைகள், நகை கடைகள் மற்றும் பாத்திர கடைகளில் குவிந்தனர். இதனால் இந்த கடைகள் அமைந்துள்ள கோட்டார், மீனாட்சிபுரம், செட்டிகுளம் சந்திப்பு, கோர்ட்டு ரோடு, கே.பி. ரோடு, கேப் ரோடு, வடசேரி, மணிமேடை சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததை காண முடிந்தது. மேலும் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், பூக்கடைகளிலும் கூட்டம் இருந்தது. இப்படி பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க இருசக்கர வாகனங்கள், கார்கள், ஆட்டோக்களில் அதிக அளவில் வந்து சென்றதால் நாகர்கோவில் மாநகரில் நேற்று வாகன நெருக்கடி அதிகமாக காணப்பட்டது.

Next Story