மயிலாடுதுறையில் பொதுமக்கள் சாலை மறியல்

மயிலாடுதுறை மாயூரநாதர் கோவில் வடக்கு வீதியில் புதிய மதுக்கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாயூரநாதர் கோவில் வடக்கு வீதியில் புதிய மதுக்கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
மயிலாடுதுறை மாயூரநாதர் கோவில் தேரோடும் வீதியான வடக்கு வீதி மயிலாடுதுறை-தரங்கம்பாடி செல்லும் பிரதான சாலையில் அமைந்துள்ளது. இந்த மாயூரநாதர் வடக்கு வீதி சாலையில் புதிய மதுக்கடையை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் ஏற்பாடு செய்தது.
அதற்காக அந்த மதுக்கடை அமைய இருந்த இடத்திற்கு நேற்று லாரி மூலம் மதுப்பாட்டில்கள் வந்து இறங்கின. இதனை கண்ட மாயூரநாதர் வடக்கு வீதி அருகே உள்ள இந்திரா காலனி மக்கள் புதிய மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது 1,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மாயூரநாதர் கோவில் தேரோடும் வீதியில் டாஸ்மாக் மதுக்்கடை அமைத்தால் ஐப்பசி மாதம் தினந்தோறும் நடைபெறும் சாமி வீதியுலாவிற்கு இடையூறு ஏற்படும் என்றும், அந்த சாலையின் அருகே பள்ளி, கல்லூரி மற்றும் குடியிருப்புகள் இருப்பதால் மதுக்கடையை திறக்கக் கூடாது என்றும் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
பேச்சு வார்த்தையால் கலைந்து சென்றனர்
இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீசார், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து அங்கு இறக்கப்பட்ட மது பாட்டில்கள் உடனடியாக எடுத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் வாக்குறுதி அளித்தனர்.
இதனையேற்று பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தின் காரணமாக மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story