காதல் திருமண ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம்
காதல் திருமண ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்லமுத்து. இவரது மகன் சிவக்குமார்(வயது 25). பி.சி.ஏ. படித்துள்ள இவர் ரீவைண்டிங் பணி செய்யும் கடை நடத்தி வருகிறார். அதே தெருவை சேர்ந்த அம்மாவாசையின் மகள் வினோதினி(22). இவர் பி.எஸ்சி. படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் இவர்கள் 2 பேரும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். மேலும் நேற்று முன்தினம் இரவு வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி, சமயபுரம் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டு காதல் திருமண ஜோடி ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
இதற்கிடையே தங்களது மகளை காணவில்லை என வினோதினியின் பெற்றோர் உடையார்பாளையம் போலீசில் புகார் செய்திருந்தனர். இந்நிலையில் காதல் திருமண ஜோடி போலீசில் தஞ்சமடைந்த தகவல் அறிந்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு வந்த வினோதினியின் பெற்றோர், தங்களுக்கும் தங்களது மகளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று கூறி எழுதிக் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சிவக்குமாரின் பெற்றோர், சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி, இரு தரப்பினரிடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் பெண் தரப்பினர் திருமணத்தை ஏற்றுக்கொள்ளாத நிலையில், காதல் திருமண ஜோடிக்கு அறிவுரை கூறி வினோதினியை சிவக்குமாருடன் அனுப்பி வைத்தார்.
Related Tags :
Next Story