முதியவரை தாக்கி ரூ.40 ஆயிரம் கொள்ளை


முதியவரை தாக்கி ரூ.40 ஆயிரம் கொள்ளை
x
தினத்தந்தி 8 Feb 2022 11:45 PM IST (Updated: 8 Feb 2022 11:45 PM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடி அருகே முதியவரை தாக்கி ரூ.40 ஆயிரத்தை கொள்ளையடித்த 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மன்னார்குடி:_

மன்னார்குடி அருகே முதியவரை தாக்கி ரூ.40 ஆயிரத்தை கொள்ளையடித்த 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 

வெளிநாட்டில் மகன்-மகள்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பரவாக்கோட்டை மேலத்தெருவை சேர்ந்தவர் நடேசதேவர் (வயது64). இவருடைய மகன் மாணிக்கவாசகம். இவர் குடும்பத்துடன் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். இவருடைய மகள் சுதா குடும்பத்துடன் அபுதாபியில் வசித்து வருகிறார். நடேச தேவரின் மனைவி சந்திரா மகளுக்கு துணையாக இருப்பதற்காக அபுதாபிக்கு 6 மாதங்களுக்கு முன்பு சென்றார்.
இந்த நிலையில் நடேச தேவர் வீட்டில் தனியாக இருந்து வருகிறார். இதனால் பாதுகாப்பிற்காக சிங்கப்பூரில் வசிக்கும் மகன் மாணிக்கவாசகம் வீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தி அதன் நேரடி காட்சிகளை சிங்கப்பூரில் இருந்தபடி செல்போனில் பார்ப்பது வழக்கம்.

ரூ.40 ஆயிரம் கொள்ளை

நேற்று முன்தினம் இரவு சிங்கப்பூரில் மாணிக்கவாசகம் வழக்கம்போல கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்தபோது முகமூடி அணிந்த 3 மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து நடேச தேவரை சரமாரியாக தாக்குவது தெரியவந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணிக்கவாசகம் உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ள தனது உறவினர்களுக்கு போன் செய்து தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து நடேச தேவர் வீட்டிற்கு வந்த உறவினர்களை கண்டதும் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். 
சம்பவம் குறித்து நடேச தேவர் பரவாக்கோட்டை போலீசில் அளித்த புகாரில் 3 மர்ம நபர்கள் தன்னை தாக்கி ரூ.40 ஆயிரத்தை கொள்ளை அடித்து சென்றதாக தெரிவித்துள்ளார்.

வேறு நோக்கம் உள்ளதா?

இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பரவாக்கோட்டை போலீசார் மர்ம நபர்கள் பணத்தை கொள்ளை அடிப்பதற்காக வந்தார்களா? இல்லை வேறு நோக்கம் ஏதாவது உள்ளதா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் தப்பிய ஓடிய 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இதனிடையே நடேச தேவரை முகமூடி அணிந்த மர்ம நபர்கள் தாக்கும் கண்காணிப்பு கேமரா பதிவுகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story