ஊட்டி வட்டார கல்வி அலுவலருக்கு தேசிய விருது
ஊட்டி வட்டார கல்வி அலுவலருக்கு தேசிய விருது
ஊட்டி
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை மூலம் ஆண்டுதோறும் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது, வட்டார மற்றும் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது. 2018-19, 2019-20 ஆகிய 2 ஆண்டுகளுக்கு கல்வி நிர்வாகத்தில் புதுமைகள் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கான தேசிய விருதை புதுடெல்லியில் இயங்கி வரும் தேசிய கல்வியியல் மேலாண்மை மற்றும் திட்டமிடல் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. அதன்படி 2019-20-ம் ஆண்டிற்கான தேசிய விருது, தமிழகத்தில் விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா, நீலகிரி மாவட்டம் குன்னூர் வட்டார கல்வி அலுவலர் கார்த்திக் ஆகிய 2 பேருக்கு வழங்கப்பட உள்ளது.
இந்த விருது வழங்கும் விழா நாளை (வியாழக்கிழமை) புதுடெல்லியில் காணொலி காட்சி மூலம் நடக்கிறது. விருதுடன் பாராட்டு சான்றிதழ், ரூ.10 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்படுகிறது. தேசிய விருது பெற உள்ள கார்த்திக், தற்போது ஊட்டி வட்டார கல்வி அலுவலராக பணியாற்றி வருகிறார். இதுகுறித்து வட்டார கல்வி அலுவலர் கார்த்திக் கூறும்போது, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் விபத்தில் இறந்தால் ரூ.75 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் விண்ணப்பிக்க ஊக்குவித்தேன். இதன் மூலம் இடைநிற்றல் குறைந்ததோடு, உயர்கல்வி பயில உதவித்தொகை கைகொடுத்தது. கடந்த 2016-17-ம் ஆண்டு நஞ்சநாடு அரசு ஆரம்ப பள்ளியில் 15 பேர் மட்டும் படித்தனர். மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்ததால், தற்போது 180 பேர் படித்து வருகின்றனர். அந்த பள்ளியில் எனது மகள் அனன்யா 2-ம் வகுப்பு படித்து வருகிறாள். 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழி திறன் படிப்பறிவு தேர்வுக்கு பயிற்சி அளிக்க ஆசிரியர்களுக்கு ஊக்கம் அளித்து வருகிறேன். இதுபோன்ற சிறந்த நிர்வாகம் மற்றும் புதுமைகளுக்காக எனக்கு தேசிய விருது அறிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
Related Tags :
Next Story