தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Feb 2022 2:45 AM IST (Updated: 10 Feb 2022 2:45 AM IST)
t-max-icont-min-icon

தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மதுரை
ரெயில் என்ஜின் டிரைவர்களுக்கு புதிய பணி நேரத்தை அமல்படுத்தக்கூடாது என்பதை வலியுறுத்தி மதுரை ரெயில் நிலைய மேற்கு நுழைவுவாயில் முன்பு எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
பணி நேரம் நீட்டிப்பு
ரெயில் என்ஜின் டிரைவர்களுக்கு 6 மணி நேரம் மட்டுமே பணி வழங்க வேண்டும் என்று மத்திய தொழிலாளர் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், மதுரை கோட்டத்தில் அந்த உத்தரவு தற்போது வரை அமல்படுத்தப்படவில்லை. இதற்கிடையே, என்ஜின் டிரைவர்களின் பணி நேரத்தை நீட்டித்து ரெயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனை கண்டித்து, எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கம் தரப்பில் ரெயில் நிலையத்தின் மேற்கு நுழைவுவாயில் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு அழகுராஜா தலைமை தாங்கினார். ரவிசங்கர் முன்னிலை வகித்தார். மதுரை கோட்ட செயலாளர் ரபீக், கோட்டத்தலைவர் செந்தில்குமார், உதவி கோட்ட செயலாளர் ராம்குமார் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அப்போது, என்ஜின் டிரைவர்களுக்கு வழக்கமான 8 மணி நேர தொடர் பணி வழங்க கூடாது என கூறப்படுகிறது. ஏனெனில், இயற்கை உபாதைகளை நிறைவேற்ற முடியாமல், தொடர்ந்து சென்றடையும் இடம் வரை பணியாற்ற வேண்டும் என்பது பாதுகாப்பு விதிமுறைகளில் கூறப்படுகிறது.
6 மணி நேர வேலை
இதற்கிடையே, புதிய பணி நேரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, என்ஜின் டிரைவர்கள் 6 ரெயில்பாதைகள், சுமார் 1,500 கி.மீ. தூரத்துக்கான வழித்தடங்களை அறிந்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2 வழித்தடங்களில் மட்டும் பணியாற்றினால் மட்டுமே பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். என்ஜின் டிரைவர்களுக்கான ஓய்வறை, தரமான உணவுகள் ஆகியன மேம்படுத்தப்படவில்லை. அதற்கு பதிலாக, பணி நேரத்தை அதிகரித்து பயணிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குகின்றனர்.
ரெயில்வே வாரிய விதிப்படி, டிரைவர்களுக்கான ஓய்வறை 3 நட்சத்திர ஓட்டல்களில் இருப்பது போல இருக்க வேண்டும். மதுரை கோட்டத்துக்கு உள்பட்ட பெரும்பாலான ரெயில் நிலையங்களில் இதுபோன்று இருப்பதில்லை. ரெயில்வே வாரியத்தலைவர் நியமிக்கப்பட்ட பின்னர், டிரைவர்களின் வேலை நேரத்தை 14 நாட்களுக்கு 100 மணி நேரம் கட்டாயம் என்று வலியுறுத்துகின்றனர். இதில் 2 ஓய்வு நாட்களையும் கணக்கில் எடுத்துக்கொள்கின்றனர்.
எஸ்.ஆர்.எம்.யூ. நாள் ஒன்றுக்கு 6 மணி நேரம் மட்டுமே பணி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. எனவே, என்ஜின் டிரைவர்களுக்கான புதிய பணி நேரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில், ஏராளமான என்ஜின் டிரைவர்கள் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தை
இந்த நிலையில், என்ஜின் டிரைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், ரெயில்களின் இயக்கத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, மதுரை கோட்ட ரெயில்வே ஊழியர் விவகார அலுவலர் சுதாகரன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். 
அப்போது, உயரதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்த பிரச்சினையில் முடிவெடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து, போராட்டம் தற்காலிகமாக விலக்கி கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

Next Story