வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2-வது கட்ட பயிற்சி வகுப்பு

தேனி உள்பட 9 இடங்களில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2-வது கட்ட பயிற்சி வகுப்பு நடந்தது.
தேனி:
பயிற்சி வகுப்பு
தேனி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்பு கடந்த 31-ந் தேதி நடந்தது. இதையடுத்து 2-வது கட்ட பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது. தேனி, போடி, பெரியகுளம், சின்னமனூர், கம்பம், கூடலூர் உள்பட 9 இடங்களில் பயிற்சி வகுப்பு நடந்தது.
6 நகராட்சிகளுக்கு 1,828 அலுவலர்கள், 22 பேரூராட்சிகளுக்கு 1,760 அலுவலர்கள் என மொத்தம் 3,588 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்துகொண்டு பயிற்சி அளித்தனர்.
கலெக்டர் ஆய்வு
போடியில் நடந்த பயிற்சி வகுப்பை மாவட்ட கலெக்டர் முரளிதரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், "வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடியின் அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். வாக்குச்சாவடிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அலுவலர்கள், போலீஸ் துறையினரால் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு வசதி குறித்தும், வாக்குப்பதிவை கண்காணிக்க பணியமர்த்தப்பட்டுள்ள வீடியோ ஒளிப்பதிவாளர்களின் வருகை குறித்தும் உறுதி செய்ய வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கட்டுப்பாட்டு கருவிகளுடன் எந்தவித இடர்பாடுகளுக்கும் இடமளிக்காத வண்ணம் பொருத்த வேண்டும். வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்களை சரிபார்த்து பெற்றுக் கொள்ள வேண்டும். கொரோனா நோய் தடுப்பு தொடர்பாக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்" என்றார்.
ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி, போடி நகராட்சி ஆணையாளர் சகிலா மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story