மரக்கிளை விழுந்து தலையில் காயம்: 2 ஆண்டுகளாக கோமாவில் இருந்த சிறுமி சாவு - நினைவு திரும்பாமலேயே உயிரிழந்த சோகம்

பெங்களூருவில், மரக்கிளை முறிந்து விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்து 2 ஆண்டுகளாக கோமாவில் இருந்த சிறுமி நினைவு திரும்பாமலேயே உயிரிழந்த சோகம் நடந்து உள்ளது.
பெங்களூரு:
கோமாவுக்கு சென்ற சிறுமி
பெங்களூரு ராமமூர்த்திநகர் அருகே கவுடலஹள்ளி பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 11-ந் தேதி ரேச்சல் பிரிஷா (வயது 10) என்ற சிறுமி தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தாள். அப்போது அப்பகுதியில் இருந்த பழமையான மரத்தில் இருந்து ஒரு மரக்கிளை முறிந்து ரேச்சல் மீது விழுந்தது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ரேச்சல் உயிருக்கு போராடினாள்.
அவளை அப்பகுதியினர் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். தலையில் பலத்த காயம் அடைந்ததால் ரேச்சல் கோமாவுக்கு சென்று விட்டாள். அவளுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
மேலும் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி அந்த ஆஸ்பத்திரிக்கு சென்று ரேச்சலை பார்த்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும் நடிகர் சுதீப்பும் செல்போனில் வீடியோ கால் மூலம் ரேச்சலில் பேசி இருந்தார்.
உயிரிழந்தாள்
இந்த நிலையில் 2 ஆண்டுகள் டாக்டர்கள் அளித்த சிகிச்சைக்கு பலன் கிடைக்காமல் போனது. அதாவது நினைவு திரும்பாமலேயே நேற்று ரேச்சல் உயிரிழந்தாள். இதுபற்றி அறிந்ததும் அவரது பெற்றோர் கதறி அழுதனர். இதற்கிடையே மாநகராட்சி அலட்சியம் காரணமாக தான் ரேச்சல் இறந்து விட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.
இதுகுறித்து மாநகராட்சி தலைமை கமிஷனர் கவுரவ் குப்தா கூறும்போது, ரேச்சலின் மரணம் துரதிர்ஷ்டவசமானது. அவரது குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கப்படும். பெங்களூருவில் உள்ள பழமையான மரங்களை வெட்டி அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Related Tags :
Next Story