தமிழக முதல் அமைச்சர் மு க ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்


தமிழக முதல் அமைச்சர் மு க ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்
x
தினத்தந்தி 13 Feb 2022 10:56 PM IST (Updated: 13 Feb 2022 10:56 PM IST)
t-max-icont-min-icon

மேற்கு வங்காள சட்டப்பேரவை முடக்கம் குறித்து தேவையில்லாமல் கருத்து பதிவிட்ட தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்தார்.

ஊட்டி

மேற்கு வங்காள சட்டப்பேரவை முடக்கம் குறித்து தேவையில்லாமல் கருத்து பதிவிட்ட தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்தார்.

தேர்தல் பிரசாரம்

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. நீலகிரி மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் தேர்தல் பிரசாரம் குன்னூர் பஸ் நிலையம் அருகே  நடைபெற்றது. 

இதில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- 

ஆளுங்கட்சியின் கைப்பாவை

பாஜனதா அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுகள் வீசிய நபர் மீது வழக்குப்பதிவு செய்வதற்கு முன்பே நீட் தேர்வை எதிர்த்து குண்டு வீசி உள்ளார் என்று போலீஸ் கமிஷனர் தெரிவித்தார். 

எல்லா கோணத்திலும் விசாரணை நடத்தி செல்போன், பின்புலம், பெட்ரோல் எங்கே வாங்கியது குறித்து ஆராய வேண்டும். தமிழகத்தில் கொலை, பாலிமை கொடுமை நடந்து வருகிறது. ஆனால், குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது. 

கேரளாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் போது பிரதமர் மோடி, மாநில முதல்-மந்திரி படம் இடம் பெறுகிறது. ஆனால், தமிழகத்தில் அரசு எந்திரம் ஆளுங்கட்சியின் கைப்பாவையாக மாறி உள்ளது. நீட் தேர்வு குறித்த ஏ.கே.ராஜன் குழு அறிக்கையை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். 

மன்னிப்பு கேட்க வேண்டும்

மேற்குவங்காள கவர்னர் சட்டப்பேரவையை காலவரையின்றி ஒத்தி வைத்து உத்தரவு பிறப்பித்ததற்கு கண்டனம் தெரிவித்த தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும். முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கேட்டுக்கொண்டதால் சட்டப்பேரவையை முடக்கியது குறித்து கவர்னர் டுவிட்டரில் கருத்து பதிவிட்டு உள்ளார். 

தேவையில்லாமல் பதிவிட்டதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். இந்திய அளவில் அரசியல் செய்வதாக கூறி தேவையில்லாமல் அரசியல் செய்ய ஆரம்பித்து விட்டார். சமூகநீதி கூட்டமைப்பில் சேர கடிதம் எழுதியும் பலர் கலந்து கொள்ளவில்லை. 

ஹிஜாப் விவகாரத்தில் அரசியல் அமைப்பு சட்டம் கூறியதை போல் கல்வி நிறுவனங்களில் அனைவரும் ஒரே மாதிரியான சீருடையை தான் அணிந்து கல்வி நிறுவனங்களுக்கு வர வேண்டும். கல்வி நிலையங்களுக்குள் மத அடையாளங்களை அணிந்து வருவதை தான் நாங்கள் எதிர்க்கிறோம்.

 பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் கல்வி நிலையங்களில் சீருடை அணிந்து வருவது உறுதிபடுத்தப்படும். கல்வி நிறுவனங்களில் மத அடையாளங்களுக்கு இடமில்லை. 

இவ்வாறு அவர் கூறினார். 


Next Story