திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 12 நீர்நிலைகளில் பறவைகள் கணக்கெடுப்பு


திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 12 நீர்நிலைகளில் பறவைகள் கணக்கெடுப்பு
x
தினத்தந்தி 14 Feb 2022 9:04 PM IST (Updated: 14 Feb 2022 9:04 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 12 நீர்நிலைகளில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

திண்டுக்கல்:
தமிழ்நாடு முழுவதும் வனத்துறை மூலம் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்திலும் நீர்நிலைகளில் கடந்த 2 நாட்களாக பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் பிரபு கூறியதாவது:-
திண்டுக்கல் மாவட்டத்தில் காப்பு காடுகளுக்கு உள்ளேயும், காப்பு காடுகளுக்கு வெளியேயும் ஈரநிலங்கள், நீர்நிலைகள், அணைகள், ஏரிகள், குளங்கள் உள்ளன. இவைகளில் பல்வேறு வகையான பறவைகள் தங்குவதோடு, வெளியிடங்களில் இருந்தும் வந்து செல்கின்றன. இந்த பறவைகளின் இனங்கள், எண்ணிக்கை, எந்தெந்த பகுதிகளில் எந்த வகையான பறவைகள் வாழ்கின்றன என்பதை அறிவது அவசியம்.
12 நீர்நிலைகள் 
மேலும் அரியவகை பறவைகளை அழிவில் இருந்து பாதுகாக்கவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது முக்கியமானது. இதற்காக 2022-ம் ஆண்டுக்கான பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதையொட்டி முன்அனுபவம், பயிற்சி பெற்ற அலுவலர்கள் மூலம் வனப்பணியாளர்கள், தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 12, 13 ஆகிய தேதிகளில் 2 நாட்கள் கணக்கெடுப்பு நடைபெற்றது.
தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரை கணக்கெடுப்பு பணி நடந்தது. அதன்படி வேடசந்தூர் குளம், அழகாபுரி அணை, அன்னபாச்சலூர் அணை, நல்லதங்காள் ஓடை, மாரியம்மன் குளம், செம்பட்டி கண்மாய், டேனரி கண்மாய், சீலப்பாடி குளம், நந்தவனப்பட்டி குளம், செட்டிநாயக்கன்பட்டி குளம், ஆத்தூர் காமராஜர் அணை, அரண்மனை குளம் ஆகிய 12 நீர்நிலைகளில் கணக்கெடுப்பு நடந்தது.
அப்போது அரிய வகை பறவைகள் கண்டறியப்பட்டு கணக்கெடுக்கப்பட்டன. இதில் வன அலுவலர்கள், பணியாளர்கள், தன்னார்வலர்கள் என 50 பேர் பல்வேறு குழுக்களாக பிரிந்து கணக்கெடுப்பில் ஈடுபட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story