நகராட்சி-பேரூராட்சிகளில் 110 வாக்குச்சாவடிகள் தயார்


நகராட்சி-பேரூராட்சிகளில் 110 வாக்குச்சாவடிகள் தயார்
x
தினத்தந்தி 18 Feb 2022 2:16 AM IST (Updated: 18 Feb 2022 2:16 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்டத்தில் நகராட்சி-பேரூராட்சிகளில் 110 வாக்குச்சாவடிகள் தயாராக உள்ளன.

பெரம்பலூர்:

நாளை ஓட்டுப்பதிவு
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நாளை (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் நகராட்சியில் 21 வார்டுகளிலும், குரும்பலூர், அரும்பாவூர், லெப்பைக்குடிகாடு ஆகிய பேரூராட்சிகளில் தலா 15 வார்டுகளிலும், ஏற்கனவே 2 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால் பூலாம்பாடி பேரூராட்சியில் மீதமுள்ள 13 வார்டுகளிலும் ஓட்டுப்பதிவு நாளை நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் 41,163 ஆண் வாக்காளர்களும், 44,002 பெண் வாக்காளர்களும், 11 மூன்றாம் பாலின வாக்காளர்களும் மொத்தம் 85,176 பேர் வாக்களிக்க உள்ளனர். அவர்கள் வாக்களிக்க வசதியாக பெரம்பலூர் நகராட்சிக்கு 50 வாக்குச்சாவடிகளும், குரும்பலூர், அரும்பாவூர் ஆகிய பேரூராட்சிகளுக்கு தலா 15 வாக்குச்சாவடிகளும், லெப்பைக்குடிகாடு பேரூராட்சிக்கு 17 வாக்குச்சாவடிகளும், பூலாம்பாடி பேரூராட்சிக்கு 13 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 110 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வாக்குச்சாவடிகளில் தேர்தலன்று மொத்தம் 440 அலுவலர்கள் பணியாற்றவுள்ளனர்.
வாக்குச்சாவடிகள் தயார்
அந்த வாக்குச்சாவடிகளில் புதிதாக வர்ணம் பூசப்பட்டுள்ளது. தொகுதி எண், பாகம் எண் எழுதப்பட்டு, முதியோர், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க செல்வதற்கு சாய்தள பாதை இரும்பு கைப்பிடியுடன் அமைக்கப்பட்டுள்ளது. சக்கர நாற்காலி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை உள்ளிட்டவையுடன் வாக்குச்சாவடி மையங்கள் தயார் நிலையில் உள்ளது.
மேலும் வாக்குச்சாவடியில் இருந்து வெளியே 100 மீட்டர் தொலைவுக்குள் வாக்காளர்களை தவிர வேறும் யாரும் வரக்கூடாது என்பதற்காக எல்லை கோடு வரையும் பணியில் ஊழியர்கள் ஈடுபட தொடங்கியுள்ளனர்.
லாரிகளில் அனுப்பப்படும் பொருட்கள்
நாளை ஓட்டுப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்படும் பொருட்கள் அடங்கிய பை ஆகியவை அனுப்பும் பணி இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது. போலீஸ் பாதுகாப்புடன் நகராட்சியில் உள்ள வார்டுகளுக்கு நகராட்சி அலுவலகத்தில் இருந்தும், பேரூராட்சிகளில் உள்ள வார்டுகளுக்கு அந்தந்த பேரூராட்சி அலுவலகங்களில் இருந்தும் லாரிகள் மூலம் அனுப்பப்படுகிறது. அந்த லாரிகள் பெரம்பலூர் அருகே தண்ணீர்பந்தலில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தயார் நிலையில் உள்ளன.
மேலும் கொரோனா வைரஸ் தடுப்பு பாதுகாப்பு உபகரணங்களான தெர்மல் ஸ்கேனர் கருவியும், பாலித்தின் கையுறைகளும், முக கவசங்களும், கிருமிநாசினி பாட்டில்களும், சர்ஜிக்கல் முக கவசமும், அலுவலர்களுக்கு ரப்பர் கையுறைகளும், முழு உடல் கவசமும், பாலித்தீன் பைகள், குப்பைத் தொட்டிகள், அட்டை பெட்டிகளும் வாக்குச்சாவடிகளுக்கு இன்று அனுப்பப்படவுள்ளது.
பதற்றமான வாக்குச்சாவடிகள்
பாதுகாப்பு பணியில் மாவட்ட போலீசார் 242 பேர் ஈடுபடவுள்ளனர். போலீசார் வாக்குச்சாவடி மையங்களில் எவ்வாறு பணியபுரிய வேண்டும் என்பது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி ஏற்கனவே ஆலோசனை வழங்கியுள்ளார். தேர்தலில் பணியாற்றவுள்ளவர்கள் தபால் ஓட்டுகள் போட்டு வருகின்றனர்.
மேலும் பெரம்பலூர் நகராட்சியில் 7 வாக்குச்சாவடிகளும், பூலாம்பாடி பேரூராட்சியில் ஒரு வாக்குச்சாவடியும், அரும்பாவூர் பேரூராட்சியில் 2 வாக்குச்சாவடிகளும் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அந்த வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவினை கண்காணிக்க கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

Next Story