12 கிலோ மீட்டர் தூர வெளிவட்ட சாலைக்கு புனித் ராஜ்குமார் பெயர்

பெங்களூருவில் 12 கிலோ மீட்டர் தூர வெளிவட்ட சாலைக்கு புனித் ராஜ்குமார் பெயரை வைக்க மாநகராட்சி நிர்வாகம் ஒப்புதல் அளித்து உள்ளது
பெங்களூரு:
புனித் ராஜ்குமார் மரணம்
கன்னட திரை உலகில் முன்னணி நடிகராக இருந்து வந்தவர் புனித் ராஜ்குமார். இவர் கடந்த ஆண்டு (2021) அக்டோபர் மாதம் 29-ந் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது திடீர் மரணம் ரசிகர்கள், திரை உலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது.
இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள ஏதாவது ஒரு சாலைக்கு புனித் ராஜ்குமாரின் பெயரை சூட்ட வேண்டும் என்று அவரது ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதுதொடர்பாக கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18-ந் தேதி மாநகராட்சி அதிகாரிகள் கூட்டம் நடத்தினர்.
12 கிலோ மீட்டர் தூர வெளிவட்ட சாலை
அப்போது மைசூரு ரோட்டில் உள்ள நாயண்டஹள்ளி ஜங்ஷனில் இருந்து பன்னரகட்டா ரோட்டில் உள்ள வேகா சிட்டி மால் ஜங்ஷன் வரை உள்ள 12 கிலோ மீட்டர் தூர வெளிவட்ட சாலைக்கு புனித் ராஜ்குமார் பெயரை சூட்ட முடிவு செய்யப்பட்டு இருந்தது.
இதையடுத்து அந்த சாலை செல்லும் வழியில் உள்ள 8 லே-அவுட்களில் வசிக்கும் மக்களிடம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 29-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை 3 நாட்கள் புனித் ராஜ்குமார் பெயரை சூட்டுவது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கருத்து கேட்டனர். இதில் 8 லே-அவுட்களிலும் வசித்து வரும் 700-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் புனித் ராஜ்குமார் பெயரை வைக்க சம்மதம் தெரிவித்து இருந்தனர். ஆனால் அந்த சாலைக்கு மறைந்த நடிகர் அம்பரீசின் பெயரை வைக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் மாநகராட்சியிடம் கோரிக்கை விடுத்து இருந்தனர்.
ரசிகர்கள் மகிழ்ச்சி
இந்த நிலையில் 8 லே-அவுட்களில் வசித்து வருபவர்களிடம் கேட்ட கருத்து குறித்து ஒரு அறிக்கை தயாரித்த மாநகராட்சி அதிகாரிகள் அதை மாநகராட்சி நிர்வாக அதிகாரி ராகேஷ் சிங்கிற்கு கடந்த 10-ந் தேதி அனுப்பி வைத்தனர். அந்த அறிக்கையை ஆய்வு செய்த ராகேஷ் சிங், 12 கிலோ மீட்டர் தூர வெளி வட்ட சாலைக்கு புனித் ராஜ்குமார் பெயரை வைக்க ஒப்புதல் வழங்கி உள்ளார்.
இதையடுத்து அந்த வெளிவட்ட சாலைக்கு புனித் ராஜ்குமார் பெயரை சூட்டும் நிகழ்ச்சியை விரைவில் நடத்த மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். 12 கிலோ மீட்டர் தூர வெளிவட்ட சாலைக்கு புனித் ராஜ்குமார் பெயர் சூட்டப்பட உள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
Related Tags :
Next Story