எந்திரம் திடீரென பழுதானதால் வாக்குப்பதிவு 2 மணி நேரம் தாமதம்


எந்திரம் திடீரென பழுதானதால் வாக்குப்பதிவு 2 மணி நேரம் தாமதம்
x
தினத்தந்தி 19 Feb 2022 11:22 PM IST (Updated: 19 Feb 2022 11:22 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் சத்துவாச்சாரி அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரம் பழுதானதால் 2 மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மதுபோதையில் கலாட்டாவில் ஈடுபட்ட நபர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர்

வேலூர் சத்துவாச்சாரி அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரம் பழுதானதால் 2½ மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மதுபோதையில் கலாட்டாவில் ஈடுபட்ட நபர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

எந்திரம் பழுது

வேலூர் மாநகராட்சியில் இன்று 58 வார்டுகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண்- 18 சத்துவாச்சாரி அரசு மேல்நிலைப்பள்ளி வாக்கு எண்ணும் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆண்களுக்கான வாக்குச்சாவடி மையத்தில் காலை முதலே வாக்குப்பதிவு நடைபெற்று வந்தது.

 ஏராளமான வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர். அதே வேளையில் அங்கு அமைக்கப்பட்டிருந்த பெண்களுக்கான வாக்குச்சாவடிகளிலும் பெண்கள் பலர் வரிசையில் நின்று வாக்களித்தனர். இந்த நிலையில் பிற்பகல் 2 மணி அளவில் ஆண்களுக்கான வாக்குச்சாவடியில் உள்ள எந்திரம் திடீரென பழுதானது.


இதையடுத்து எந்திரத்தை சரிசெய்ய அலுவலர்கள் முயன்றனர். ஆனால் சரிசெய்ய முடியவில்லை. இதையடுத்து புதிய எந்திரம் வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கலாட்டா

இதனிடையே வாக்குச்சாவடி மையத்திற்கு 3 பேர் மது குடித்துவிட்டு வந்து போதையில் கலாட்டாவில் ஈடுபட்டனர். வாக்களிக்க காத்திருந்த பொதுமக்களுக்கு அவர்கள் இடையூறு ஏற்படுத்தினர். இதனைப்பார்த்த போலீசார் அங்கிருந்து அவர்களை வெளியேற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

வாக்குச்சாவடி மையத்தில் பதற்றம் நிலவுவதை அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார்.

 மேலும், அந்த மையத்துக்கு அதிவிரைவு படை போலீசாரும் வரவழைக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மாலை 4.15 மணி அளவில் புதிய எந்திரம் கொண்டு வரப்பட்டு வேட்பாளர்கள் பெயர், சின்னம் பொருத்தும் பணி நடைபெற்றது. இந்த பணி முடிவடைந்து 4.30 மணி அளவில் அதாவது 2½ மணி நேரம் கழித்து மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது.

வாக்களிக்க காத்திருந்த வாக்காளர்கள் பலர் பொறுமை இழந்து அங்கிருந்து வீட்டுக்கு சென்று விட்டனர்.

வாக்குவாதம்

இதற்கிடையே வாக்குச்சாவடி மையத்திற்கு ஒருவர் திடீரென முகத்தில் காயங்களுடன் வந்தார். அவர் தன்னை ஒரு கட்சியினர் தாக்கி விட்டதாகக் கூறி அங்கிருந்த போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

இதையடுத்து போலீசார் அவரை ஆசுவாசப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

எந்திரம் பழுதானதால் வாக்குச் சாவடியில் குறைந்த அளவிலான வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
ெதாடர்ந்து 5 மணிக்கு அங்கிருந்த வாக்காளா்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. 

Next Story