நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 73.46 சதவீத வாக்குப்பதிவு


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 73.46 சதவீத வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 19 Feb 2022 11:58 PM IST (Updated: 19 Feb 2022 11:58 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 73.46 சதவீத வாக்குப்பதிவு பதிவாகி உள்ளன.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 73.46 சதவீத வாக்குப்பதிவு பதிவாகி உள்ளன.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை, ஆரணி, வந்தவாசி, திருவத்திபுரம் ஆகிய 4 நகராட்சிகள் மற்றும் செங்கம், புதுப்பாளையம், கீழ்பென்னாத்தூர், வேட்டவலம், போளூர், களம்பூர், கண்ணமங்கலம், சேத்துப்பட்டு, பெரணமல்லூர், தேசூர் ஆகிய 10 பேரூராட்சிகளில் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. 

நகராட்சி பகுதிகளில் 123 வார்டுகளும், போளூர் பேரூராட்சியில் ஒரு வார்டில் மட்டும் ஒருவர் போட்டியின்றி வெற்றி பெற்று உள்ளதால் அதை தவிர்த்து பேரூராட்சி பகுதிகளில் 149 வார்டுகளும் என மொத்தம் 272 வார்டுகள் உள்ளன. இதில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி உள்பட பல்வேறு கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என 1,214 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 

 454 வாக்குச்சாவடி மையங்கள்

இந்த நிலையில் நேற்று காலை 7 மணி அளவில் வாக்குப்பதிவு தொடங்கியது. 
திருவண்ணாமலை மாவட்டத்தில் 454 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இதில் திருவண்ணாமலை நகராட்சியில் மட்டும் 144 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. வாக்குச்சாவடி மையங்களில் 2 ஆயிரத்து 180 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். 

வாக்குச்சாவடி மையங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு வரப்பட்டது. அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன.

மேலும் மாவட்டத்தில் 143 பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் 113 மையத்தில் வெப் கேமரா மூலம் இணையதளம் வாயிலாக தொடர்ந்து நேரடியாக கண்காணிக்கப்பட்டது. மீதமுள்ள 30 மையங்கள் மைக்ரோ அப்சர்வர் மூலம் கண்காணிக்கப்பட்டது. 

அதுமட்டுமின்றி பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. நேற்று காலையில் இருந்து வாக்குப்பதிவு விறு, விறுப்பாக நடைபெற்றது. இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை ஆர்வமாக வந்து வாக்குச்சாவடி மையங்களில் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.

 முதல் முறை...

மேலும் இளைஞர்கள் பலர் முதல் முறை வாக்களிக்க வாக்குச்சாவடி மையங்களுக்கு வருகை தந்தனர். திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் தங்கி உள்ள சாதுக்களும் ஆர்வமாக வந்து வாக்களித்தனர்.

அதுமட்டுமின்றி அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு கைகளுக்கு கிருமி நாசினி வழங்கப்பட்டு, தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை கண்டறியப்பட்டது. 

மேலும் முகக்கவசம் அணியாமல் வந்த நபர்களை முகக்கவசம் அணிந்து வர அறிவுறுத்தப்பட்டது. வாக்குச்சாவடி மையம் உள்ள இடத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவிலேயே வாகனங்கள் நிறுத்தப்பட்டு பொதுமக்களை மட்டும் வாக்களிக்க செல்ல அனுமதித்தனர்.

அந்த இடத்தில் இருந்து வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் வாக்களிக்க செல்லும் மக்களிடம் தங்களுக்கு வாக்களிக்க வலியுறுத்தினர். வாக்குச்சாவடி மையங்களில் முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வசதியாக சக்கர நாற்காலிகள் வைக்கப்பட்டிருந்தது. 

ஒரு சில இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுது ஏற்பட்டது. பின்னர் அது சரிசெய்யப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது. சில இடங்களில் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் வாக்குச்சாவடி மையம் அருகில் கூடி இருந்ததால் லேசான வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் உடனடியாக சமரசம் செய்து வைத்தனர்.

வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்த பின்னர் வாக்குச்சாவடி மையங்களில் உள்ள வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்களது முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு ‘சீல்’ வைத்து சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.
திருவண்ணாமலை நகராட்சியில் 61.11 சதவீத வாக்குப்பதிவு பதிவாகி உள்ளன. 

 ஆரணி

ஆரணி நகராட்சியில் உள்ள 33 வார்டு பதவிகளுக்கு 65 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. காலையில் இருந்தே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். 

பெரும்பாலான வாக்குச்சாவடி மையங்களில் நீண்ட வரிசையில் நின்று வாக்காளர்கள் ஓட்டு போட்டனர். இதில் 75.15 சதவீத வாக்குகள் பதிவாகின. 

 திருவத்திபுரம்

திருவத்திபுரம் நகராட்சியில் 27 வார்டுகள். அங்குள்ள பொதுமக்கள் வாக்களிப்பதற்காக 40 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 7 மணி அளவில் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது.

இதில் 11 ஆயிரத்து 897 ஆண் வாக்காளர்களும், 12 ஆயிரத்து 716 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 24 ஆயிரத்து 613 பேர் வாக்களித்துள்ளனர். இது 75.70 சதவீதம் என தேர்தல் நடத்தும் அலுவலர் ரகுராமன் தெரிவித்துள்ளார்.

 வந்தவாசி

வந்தவாசி நகராட்சியில் உள்ள 24 வார்டு பதவிகளுக்கு 117 பேர் போட்டியிட்டனர். இதற்காக 34 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. இதில், 75.66 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரு சில வாக்குச்சாவடிகளில் வாக்குவாதம் ஏற்பட்டதை தவிர, மற்றபடி வாக்குப்பதிவு அமைதியாகவே நடந்து முடிந்தது. 

 கீழ்பென்னாத்தூர்

கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் வசிக்கும் பொதுமக்கள் வாக்களிக்க ஏதுவாக 15 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டன. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடந்தது. 

அதன் பின்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க ஒரு மணி நேரம் வழங்கப்பட்டது. ஆனால் யாரும் வாக்களிக்க வராததால் மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தது. இதில் 82.55 சதவீத வாக்குகள் பதிவானதாக கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயபிரகாஷ் தெரிவித்துள்ளார். 

வாக்குப்பதிவின் போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் திருவண்ணாமலை துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் தலைமையில், கீழ்பென்னாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

 கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டு பதவிகளுக்கு 15 வாக்குச்சாடி மையங்களில் தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. இங்கு 78.57 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 

தொடர்ந்து வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு வேட்பாளர்கள் மற்றும் ஏஜெண்டுகள் முன்னிலையில் ‘சீல்’ வைக்கப்பட்டது. பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு எந்திரங்கள் எட்டிவாடி தனியார் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.

முன்னதாக வாக்குச்சாவடிகளில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஜீஜாபாய், தேர்தல் பொறுப்பாளர் வசந்தலட்சுமி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

வாக்குச்சாவடி மையங்களில் கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், தரணி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

போளூர்

போளூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில், 21 ஆயிரத்து 986 வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் வாக்களிப்பதற்காக 30 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 

காலை 7 மணியில் இருந்து தொடர்ந்து மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 8 ஆயிரத்து 130 ஆண் வாக்காளர்கள், 9 ஆயிரத்து 65 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 17 ஆயிரத்து 196 பேர் வாக்களித்தனர். இது 81.52 சதவீதம் ஆகும்.

முன்னதாக தேர்தல் பார்வையாளரும், ஆரணி வருவாய் கோட்டாச்சியருமான கவிதா போளூரில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் ஆய்வு செய்தார். அப்போது தேர்தல் நடத்தும் அதிகாரியும், பேரூராட்சி செயல் அலுவலருமான முஹம்மது ரிஜ்வான் உடன் இருந்தார்.

போளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

சேத்துப்பட்டு

சேத்துப்பட்டு சிறப்பு நிலை பேரூராட்சியில் உள்ள 18 வார்டு பதவிகளுக்கு 19 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், 80.68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 

தேசூர் பேரூராட்சியில் 12 வார்டுகளில் நடந்த தேர்தலில் 80.03 சதவீதமும், பெரணமல்லூர் பேரூராட்சியில் 12 வார்டுகளில்  நடந்த தேர்தலில் 84.41 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

செங்கம்

செங்கம் பேரூராட்சியில் நடந்த தேர்தலில் 76.72 சதவீதமும், புதுப்பாளையம் பேரூராட்சியில் 77.86 சதவீதமும் வாக்குகள் பதிவாகியதாக தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.
செங்கம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-வது வார்டு வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவின் போது அங்கிருந்த நபர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்ததாக தெரிகிறது. 

செங்கம் தோக்கவாடியில் வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு எந்திரம் பழுதானதால் ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு காலதாமதமாக தொடங்கப்பட்டது. 

அதேபோல நேற்று மாலையும் அங்கு அதிகாரிகளுடன் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு நிலவியது. செங்கம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையங்களில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

களம்பூரில் 83.28 சதவீதமும், வேட்டவலத்தில் 78.73 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

73.46 சதவீத வாக்குப்பதிவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை, திருவத்திபுரம், வந்தவாசி, ஆரணி ஆகிய 4 நகராட்சிகளில் 70.26 சதவீதமும், கீழ்பென்னாத்தூர், கண்ணமங்கலம், போளூர், சேத்துப்பட்டு, தேசூர், பெரணமல்லூர், செங்கம், புதுப்பாளையம், வேட்டவலம், களம்பூர் ஆகிய 10 பேரூராட்சிகளில் 80.07 சதவீத வாக்குப்பதிவு பதிவாகி உள்ளன. மாவட்டத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 73.46 சதவீத வாக்குப்பதிவு பதிவாகியுள்ளன.

Next Story