ஹிஜாப்பிற்கு அனுமதி கோரி மாணவிகளுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம்


ஹிஜாப்பிற்கு அனுமதி கோரி மாணவிகளுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 20 Feb 2022 2:00 AM IST (Updated: 20 Feb 2022 2:00 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் போலீசார் எச்சரிக்கையையும் மீறி முஸ்லிம் மாணவிகளுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு உண்டானது.

பெங்களூரு: கர்நாடகத்தில் போலீசார் எச்சரிக்கையையும் மீறி முஸ்லிம் மாணவிகளுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு உண்டானது.

ஹிஜாப் விவகாரம் 

கர்நாடகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் மத அடையாள ஆடைகள் அணிய ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது. இதனால் மாணவ-மாணவிகள் சீருடையில்தான் வகுப்பிற்கு வரவேண்டுமென்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் எங்கள் உரிமை என்று கூறி கல்லூரியை முற்றுகையிட்டு போராடி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று கர்நாடகத்தில் ஒரு சில இடங்களில் முஸ்லிம் பெண்களுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொப்பல் மாவட்டம் கங்காவதியில் உள்ள அரசு கல்லூரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. முஸ்லிம் மாணவிகள் மற்றும் 100-க்கும் அதிகமான முஸ்லிம் மாணவர்கள் வகுப்பறைக்குள் நுழைந்தனர். அவர்களை கல்லூரி நிர்வாகிகள் தடுத்து நிறுத்தினர். இருப்பினும் அவர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். மேலும் நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்த முற்பட்டனர். 

பேச்சுவார்த்தை

இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பிற்கு இருந்த போலீசார் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஐகோர்ட்டு இறுதி தீர்ப்பு வரும் வரை பொறுமை காக்கும்படி கூறினர். இதை ஏற்க மறுத்த மாணவர்கள், சில நிமிடங்கள் வளாகத்தை சுற்றி வந்தனர். பின்னர் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தியதும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதேபோன்று உடுப்பியில் மிலகிராஸ் கல்லூரியில் முஸ்லிம் மாணவிகளுக்கு ஆதரவாக அந்த சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது மாணவிகளுக்கு அனுமதியில்லை என்று கல்லூரி நிர்வாகம் கூறியதும், மாணவர்களும் வகுப்பை புறக்கணிப்பதாக கூறி, வீட்டிற்கு திரும்பி சென்றனர். 

கல்லூரிக்கு விடுமுறை

தாவணகெரே மாவட்டம் ஹரிகராவில் எஸ்.ஜே.வி.பி. கல்லூரியில் முஸ்லிம் மாணவிகளுக்கு ஹிஜாப் அணிய அனுமதி மறுக்கப்பட்டதால் அவர்கள் வகுப்பை புறக்கணித்து போராடினர். இதேபோன்று பெலகாவியில் விஜய் பாரா மருத்துவ கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் வளாகத்தில் அமர்ந்து போராடினர். கல்லூரி முதல்வர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. இதையடுத்து கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. 

இதை தொடர்ந்து ஹாசனில் அரசு மகளிர் பி.யூ கல்லூரி, ராமநகர் குண்டூர் அரசு கல்லூரி, குடகு மாவட்டம் மடிகேரியில் உள்ள பி.யூ. கல்லூரி, பெல்லாரி சரளா தேவி கல்லுரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் முஸ்லிம் மாணவிகள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

ஹிஜாப்பை கழற்றிய மாணவிகள்

ராய்ச்சூர் டவுனில் உள்ள பி.யூ. கல்லூரி மற்றும் யாதகிரியில் உள்ள அரசு பி.யூ கல்லூரியில் மாணவிகள் சிலர் ஹிஜாப்பை கழற்றிவிட்டு வகுப்பறைக்குள் சென்றனர். இந்து மாணவிகளும் அவர்களை வரவேற்று வகுப்பறைக்குள் அழைத்து சென்றனர்.

ராய்ச்சூரில் முஸ்லிம் மத குருக்கள், மவுலானாக்கள் மற்றும் முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்தவர்களை அழைத்து கலெக்டர் அவினாஷ் மேனன் ராஜன் ஆலோசனை நடத்தினார். அப்போது மாணவர்களிடையே மத உணர்வுகளை தூண்டவேண்டாம். அவர்களுக்கு ஹிஜாப்பை விட படிப்பு மிகவும் முக்கியம். தேர்வு நெருங்குகிறது. நீங்கள் மாணவர்களுக்கு எடுத்துகூறி, ஹிஜாப்பை கழற்றிவிட்டு சீருடையை அணிந்து வகுப்பறைக்கு வரும்படி வலியுறுத்துங்கள் என்று கூறினார். 

ராய்ச்சூரை போல பிற மாவட்ட கலெக்டர்களும் இதுபோன்ற முடிவை எடுத்தால் விரைவில் ஹிஜாப் போராட்டத்தை தடுக்கலாம் என்று பலரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தட்சிண கன்னடாவில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு 

தட்சிண கன்னடா மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் தொடர்ந்து ஹிஜாப் போராட்டம் தொடர்பான பதற்றம் நீடித்து வருகிறது. இதனால் தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளை சுற்றி 200 மீட்டர் சுற்றளவுக்கு 19-ந் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த 144 தடை உத்தரவை 26-ந் தேதி வரை நீட்டித்து மாவட்ட கலெக்டர் ராஜேந்திரா உத்தரவிட்டுள்ளார். இந்த தடை உத்தரவு நேற்று மாலை 6 மணிக்கு அமலுக்கு வந்தது. வருகிற 26-ந் தேதி மாலை 6 மணி வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story