வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு


வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 20 Feb 2022 7:45 PM IST (Updated: 20 Feb 2022 7:45 PM IST)
t-max-icont-min-icon

வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. மேலும் வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

ஊட்டி

வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. மேலும் வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

வாக்குப்பதிவு எந்திரங்கள்

நீலகிரி மாவட்டத்தில் 4 நகராட்சிகளில் 108 வார்டுகள், 11 பேரூராட்சிகளில் 183 வார்டுகள் என மொத்தம் 291 வார்டுகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று நடைபெற்றது. 3 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 288 இடங்களுக்கு 1,253 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 

தேர்தலையொட்டி 406 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது. தேர்தல் முடிந்த பிறகு வாக்குச்சாவடிகளில் கட்டுப்பாட்டு எந்திரங்கள், வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டது. தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் ஏற்றி உள்ளாட்சி அமைப்புகளில் தயார் செய்யப்பட்டு இருந்த வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. 

துப்பாக்கி ஏந்திய போலீஸ்

பின்னர் இரவோடு இரவாக பாதுகாப்பு அறைகளில் வார்டு வாரியாக தரையில் எந்திரங்கள் அடுக்கி வைக்கப்பட்டது. மேலும் வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் தேர்தல் பொருட்கள் அனைத்தும் சரியாக கொண்டு வரப்பட்டு உள்ளதா? என்பதை தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உறுதி செய்தனர். 

இதைத்தொடர்ந்து இன்று அதிகாலை ஊட்டி நகராட்சியில் ரெக்ஸ் மேல்நிலைப்பள்ளி வாக்கு எண்ணும் மையத்தில் 2 பாதுகாப்பு அறைகள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது. இதேபோல் மேலும் 12 இடங்களில் உள்ள 14 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைத்து ‘சீல்’ வைக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. 

3 அடுக்கு பாதுகாப்பு

ஆயுதப்படை போலீசார், போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் போலீசார், ஊர்க்காவல் படையினர் என 15 வாக்கு எண்ணும் மையங்களில் 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் எந்திரங்கள் வைக்கப்பட்ட பாதுகாப்பு அறைகள் மற்றும் வாக்கு எண்ணும் இடம் வெளிப்பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. 

இதில் பதிவாகும் காட்சிகளை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. அதில் டி.வி.க்கள் மூலம் போலீசார் கண்காணித்து வருகின்றனர். மேலும் வாக்கு எண்ணும் மையங்களுக்குள் வெளிநபர்கள் யாரும் செல்ல அனுமதி இல்லை. வாகனங்கள் சோதனை செய்த பின்னர் உள்ளே அனுமதிக்கப்படுகிறது.

நெல்லியாளம் நகராட்சி

கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பலத்த போலீஸ் பாதுகாப்புடன், அங்குள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் உள்ள பாதுகாப்பு அறையில் வைத்தனர். மேலும் ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் இருந்தும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு வந்து வைக்கப்பட்டது. தொடர்ந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறையை பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது. மேலும் வெளிநபர்கள் யாரும் நுழையாமல் தடுக்க பாதுகாப்புக்கு போலீசார் நிறுத்தப்பட்டனர்.  

தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கும், நடுவட்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், அங்குள்ள அரசு பள்ளிக்கும், நெல்லியாளம் நகராட்சிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், பந்தலூர் புனித சேவியர் மகளிர் தொடக்கப்பள்ளிக்கும் கொண்டு செல்லப்பட்டது.


Next Story