இன்று நடைபெற இருந்த சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தம்


இன்று நடைபெற இருந்த சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தம்
x
தினத்தந்தி 20 Feb 2022 11:41 PM IST (Updated: 20 Feb 2022 11:41 PM IST)
t-max-icont-min-icon

இன்று நடைபெற இருந்த சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

வேலூர்

வேலூரை அடுத்த அத்தியூர் கிராமத்தில் 18 வயது நிரம்பாத சிறுமிக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட சைல்டுலைன் அலுவலகத்துக்கு நேற்று புகார்கள் வந்தன. அதன்பேரில் சைல்டுலைன் அணி உறுப்பினர் அம்பேத்கர், சமூகநலத்துறை ஊழியர் பூங்கொடி மற்றும் அரியூர் போலீசார் அங்கு சென்று விசாரித்தனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு படிப்பை பாதியில் நிறுத்திய 17 வயது சிறுமிக்கும், விருதம்பட்டை சேர்ந்த 28 வயதுடைய வாலிபருக்கும் விரிஞ்சிபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று காலை (திங்கட்கிழமை) திருமணம் நடைபெற இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து சிறுமியின் திருமணத்தை அலுவலர்கள் தடுத்து நிறுத்தினர். பின்னர் இருதரப்பு பெற்றோரையும் அழைத்து பேசி, பெண்ணிற்கு 18 வயது நிரம்பிய பின்னரே திருமணம் செய்ய வேண்டும் என்று எழுதி வாங்கினர். மேலும் வேலூர் குழந்தை நலக்குழுமத்திடம் அந்த சிறுமி இன்று ஒப்படைக்கப்பட உள்ளார்.

Next Story