அதிக பாரம் ஏற்றிய 17 வாகனங்களுக்கு ரூ.5 லட்சத்து 40 ஆயிரம் அபராதம் - 5 வாகனங்கள் சிறைபிடிப்பு

விதிமுறைகளை மீறி அதிக பாரம் ஏற்றிவந்த 17 வாகனங்களுக்கு ரூ.5 லட்சத்து 40 ஆயிரம் அபராதம் விதித்து 5 வாகனங்களை போக்குவரத்து துறை அதிகாரிகள் சிறைபிடித்தனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழக போக்குவரத்து ஆணையர், சென்னை வடக்கு சரக இணை போக்குவரத்து ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில், திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலர் மோகன் தலைமையில் மோட்டார் வாகன சூப்பிரண்டு கா.பன்னீர்செல்வம் மற்றும் போலீசார் திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, மப்பேடு ஆகிய பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, அதிக பாரம் ஏற்றிவந்த மற்றும் பின்புறம் சரக்கு ஏற்றும் பகுதியின் மேல்பகுதியை உயர்த்தியும் வந்த 17 வாகனங்களுக்கு ரூ.1 லட்சத்து 42 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 3 லட்சத்து 98 ஆயிரம் அபராதம் சாலைவரி கட்டாத வாகனங்களுக்கு விதிக்கப்பட்டது. மொத்தம் ரூ.5 லட்சத்து 40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த வாகன சோதனையில் 5 வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டது.
மேலும், இந்த தணிக்கை குறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் கா.பன்னீர்செல்வம் கூறியதாவது:-
டிப்பர் லாரிகளில் அதிக பாரம் ஏற்றும் நோக்கத்தில் சரக்கு ஏற்றும் பகுதியை சட்டத்திற்குப்புறம்பாக அனுமதியின்றி உயர்த்தி இயக்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதுபோன்ற உருமாற்றம் செய்த வாகனங்களுக்கு திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தகுதிச்சான்று வழங்கப்படுவதில்லை என்றும் கூறினார்.
இறுதியாக, சரக்கு வாகன உரிமையாளர் விதிமுறைகளுக்கு உட்பட்டு வாகனங்களை இயக்கினால் சாலை சேதமடையாமலும், பிரேக் பெயிலியர் ஏற்படாமல் விபத்துக்களை தவிர்த்து விபத்தில்லா சாலையை உருவாக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story