தாதா தாவூத் இப்ராகிமுடன் தொடர்புடைய வழக்கில் மந்திரி நவாப் மாலிக் அதிரடி கைது


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 23 Feb 2022 11:29 PM IST (Updated: 23 Feb 2022 11:29 PM IST)
t-max-icont-min-icon

தாதா தாவூத் இப்ராகிமுடன் தொடர்புடைய சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் மந்திரி நவாப் மாலிக்கை அமலாக்கத்துறை அதிரடியாக கைது செய்தது.

மும்பை, 
மும்பையில் 1993-ம் ஆண்டு தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. 
10 இடங்களில் சோதனை
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம். பாகிஸ்தானில் தலைமறைவாக இருந்து கொண்டு சொகுசு வாழ்க்கை நடத்தி வருவதாக கூறப்படும் இவர், கூட்டாளிகள் மூலம் இந்தியாவில் தொடர்ந்து பயங்கரவாதத்தை பரப்ப ஹவாலா பண பரிமாற்றம், நில மோசடி போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. 
இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) சமீபத்தில் வழக்குப்பதிவு செய்து இருந்தது. இதன் அடிப்படையில் அமலாக்கத்துறை கடந்த 15-ந்தேதி மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் மற்றும் அவரது கூட்டாளிகள் தொடர்புடைய 10 இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது. 
மந்திரி வீட்டுக்கு வந்த அமலாக்கத்துறை
இதையடுத்து மும்பை நிழல் உலகத்துடன் தொடர்புடைய சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளரும், மராட்டிய சிறுபான்மையினர் நலத்துறை மந்திரியுமான நவாப் மாலிக்கிற்கு தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை கருதியது.
இந்தநிலையில் எதிர்பாராத விதமாக நேற்று காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் மும்பையில் உள்ள மந்திரி நவாப் மாலிக் வீட்டிற்கு வந்தனர். இதை கண்டு மந்திரி அதிர்ச்சி அடைந்தார். மந்திரியை அவரது காரிலேயே பல்லர்டு எஸ்டேட் பகுதியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு காலை 8 மணி அளவில் அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் சுமார் 8 மணி நேரம் துருவி துருவி விசாரணை நடத்தினர். மேலும் வாக்குமூலத்தையும் பதிவு செய்தனர். 
அதிரடி கைது
இதையடுத்து மந்திரி நவாப் மாலிக்கை அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். மராட்டியத்தில் சிவசேனா தலைமையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அங்கம் வகிக்கும் கூட்டணி அரசு ஆட்சி செய்து வரும் நிலையில், அந்த அரசின் மூத்த மந்திரி ஒருவரை மத்திய விசாரணை முகமையான அமலாக்கத்துறை கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. 
கைது நடவடிக்கையை தொடர்ந்து 62 வயதான மந்திரி நவாப் மாலிக்கை மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அப்போது வெளியே வந்த நவாப் மாலிக், அங்கு திரண்டு இருந்த பத்திரிகையாளர்கள், கட்சி தொண்டர்களை பார்த்து கையசைத்தார். தனது போராட்டம் தொடரும் என்றும், அதில் வெற்றி பெறுவேன் என்றும் கூறினார். மேலும் இதுபோன்ற நடவடிக்கையால் அடிபணிய மாட்டேன் என்றும் கூறியபடி சென்றார். 
மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வருகிற 3-ந்தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டது. 
கழுகு பார்வை
கடந்த ஆண்டு மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மந்திரி நவாப் மாலிக்கின் உறவினர் ஒருவரை கைது செய்திருந்தனர். பின்னர் மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருள் விருந்து நடந்ததாகவும், அதில் பங்கேற்றதாகவும் கூறி நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டார். இதையடுத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவின் மும்பை மண்டல இயக்குனராக இருந்த சமீர் வான்கடே மீது மந்திரி நவாப் மாலிக் அடுக்கடுக்கான புகார்களை கூறி வந்தார். 
இதையடுத்து மந்திரி நவாப் மாலிக் மீது அமலாக்கத்துறையின் கழுகுப்பார்வை விழுந்தது. இந்த சூழலில் அவர் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக மந்திரி நவாப் மாலிக்கிடம் விசாரணை நடந்தபோது அமலாக்கத்துறை அலுவலகம் முன் திரண்ட தேசியவாத காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். 
 ஆளும் கட்சிகள் கண்டனம்
அமலாக்கத்துறையின் இந்த திடீர் நடவடிக்கைக்கு மராட்டியத்தை ஆளும் கூட்டணி கட்சிகளான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. 
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறுகையில், “இது எதிர்பார்த்தது தான். எனது கட்சியை சேர்ந்த மந்திரி நவாப் மாலிக் விசாரணை முகமைகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவது குறித்து பகிரங்கமாக பேசி வந்தார். அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 1990-ம் ஆண்டுகளில் நான் மராட்டிய முதல்-மந்திரியாக இருந்தபோது, என்னை மும்பை நிழல் உலகத்துடன் தொடர்புப்படுத்தினர். 25 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது, அதுபோன்ற அவதூறு பரப்பப்படுகிறது” என்றார்.
சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறுகையில், “அமலாக்கத்துறை நடவடிக்கை மராட்டிய அரசை எதிர்க்கும் வகையில் உள்ளது. மத்திய விசாரணை முகமைகள் பா.ஜனதாவின் மாபியா போல செயல்படுகிறது. இதை கண்டு நாங்கள் அஞ்சப்போவதில்லை” என்றார். 
மூத்த மந்திரி ஒருவர் திடீரென கைது செய்யப்பட்டு இருப்பது மராட்டிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story