குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி கொன்னையார் ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி கொன்னையார் ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
எலச்சிபாளையம்:
எலச்சிபாளையம் அடுத்த கொன்னையார் கிராமத்தில் 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊராட்சி சார்பில் திருமணிமுத்தாறு வாய்க்காலில் இருந்து பொதுமக்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டது. தற்போது அங்கு குடிநீர் குழாய் உடைந்து 4 மாத காலமாக அப்பகுதி மக்கள் போதிய தண்ணீர் வசதியில்லாமல் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஆணையாளரிடம் புகார் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று திரண்டு வந்து ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தகவல் அறிந்து அங்கு வந்த எலச்சிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குலசேகரன் முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். குடிநீர் பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஊராட்சி மன்ற தலைவர் நடராஜன் தெரிவித்ததையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story