சிதம்பரம் அருகே அழுகிய முட்டை சாப்பிட்ட 29 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்


சிதம்பரம் அருகே அழுகிய முட்டை சாப்பிட்ட 29 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்
x
தினத்தந்தி 25 Feb 2022 10:48 PM IST (Updated: 25 Feb 2022 10:48 PM IST)
t-max-icont-min-icon

சிதம்பரம் அருகே அத்தியாநல்லூர் தொடக்கப்பள்ளியில் அழுகிய முட்டை சாப்பிட்ட 29 மாணவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் ஆஸ்பத்திாியில் சிகிச்சை பெற்றனர்.

சிதம்பரம்,

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள அத்தியாநல்லூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த சுமார் 100 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தினசரி சத்துணவுடன் முட்டை வழங்கப்பட்டு வருகிறது.  அந்த வகையில் நேற்றும் வழக்கம்போல் சத்துணவுடன் முட்டை வழங்கப்பட்டது. உணவு சாப்பிட்டதும், மாணவர்கள் தங்களது வகுப்பறைக்கு சென்றனர். அப்போது சில மாணவர்களுக்கு அடுத்தடுத்து வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதில் 29 மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். 

ஆஸ்பத்திாியில் சிகிச்சை

இதையடுத்து அவர்களை ஆசிரியர்கள் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.  இதற்கிடையே இந்த சம்பவம் பற்றி அறிந்த சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி, பரங்கிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுகுமார், சிவஞானசுந்தரம் ஆகியோர் பள்ளிக்கும், ஆஸ்பத்திரிக்கும் சென்று விசாரணை நடத்தினர்.  அதில் மாணவர்களுக்கு வழங்கியது அழுகிய முட்டை என்பது தெரியவந்தது. தொடர்ந்து அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளியில் அழுகிய முட்டை சாப்பிட்ட 29 மாணவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story