வேலூர் மாநகராட்சி புதிய மேயருக்கு அங்கி தயார் செய்ய முடிவு

வேலூர் மாநகராட்சி புதிய மேயருக்கு அங்கி தயார் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
வேலூர்
வேலூர் மாநகராட்சி புதிய மேயருக்கு அங்கி தயார் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கான இருக்கையை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
புதிய மேயர்
வேலூர் மாநகராட்சிக்கான தேர்தலில் மொத்தம் உள்ள 60 வார்டுகளில் 44 வார்டுகளில் வெற்றி பெற்று தி.மு.க. மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது. அ.தி.மு.க. 7 வார்டுகளிலும், பா.ம.க., பாஜ.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி தலா ஒரு வார்டிலும், சுயேச்சைகள் 6 வார்டிலும் வென்றுள்ளனர்.
தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பதவியேற்பு வருகிற 2-ந் தேதி வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடக்கிறது. இதையடுத்து 4-ந் தேதி மேயரை தேர்வு செய்யவதற்கான மறைமுக தேர்தல் நடைபெறும்.
இதைமுன்னிட்டு வேலூர் மாநகராட்சி அலுவலகத்தை புதுப்பொலிவுடன் மாற்றும் பணி நடந்து வருகிறது. அங்குள்ள மேயர், துணை மேயர் அறைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. கூட்ட அரங்கையும் பொலிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது.
மேயர் அங்கி
இதேபோல, மாநகராட்சி மேயர் பயன்படுத்தும் வெள்ளி செங்கோல், 140 பவுன் நகையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் மாநகராட்சி அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் நேற்று ஆய்வு செய்தார். அப்போது கவுன்சிலர்கள் அமரும் இருக்கைகளை சுத்தம் செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேயர் இருக்கையும் சீரமைக்கப்பட்டு வருகிறது.
மேலும் மேயர் அணியக்கூடிய கருப்பு, சிவப்பு நிற அங்கிகள் கடந்த 2008-ம் ஆண்டு தயார் செய்யப்பட்டது. பல ஆண்டுகளாக இந்த அங்கி பயன்படுத்தப்படவில்லை. இதனால் இந்த முறை மேயருக்கான அங்கி புதிதாக தயார் செய்ய முடிவு செய்துள்ளனர்.
தி.மு.க.வில் மேயர் யார் என அறிவிக்கப்பட்டதும் அவருக்கு கச்சிதமாக பொருந்தும் வகையில் அளவு செய்து புதிய அங்கி தயார் செய்யப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story