திண்டுக்கல் மாநகராட்சியில் 48 கவுன்சிலர்கள் பதவிஏற்பு


திண்டுக்கல் மாநகராட்சியில் 48 கவுன்சிலர்கள் பதவிஏற்பு
x
தினத்தந்தி 2 March 2022 8:41 PM IST (Updated: 2 March 2022 8:41 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாநகராட்சியில் 48 கவுன்சிலர்கள் நேற்று பதவி ஏற்றனர்.

திண்டுக்கல்:

கவுன்சிலர்கள் பதவி ஏற்பு 

திண்டுக்கல் மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் போட்டியிடுவதற்கு மொத்தம் 338 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இவர்களில் தள்ளுபடி, வாபஸ் போக மீதம் 275 பேர் களத்தில் போட்டியிட்டனர்.

 இதையடுத்து தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் கவுன்சிலர்களாக பதவிஏற்கும் நிகழ்ச்சி நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இதற்காக மாநகராட்சி அலுவலக வளாகத்தில் விழா மேடை, பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. இதில் அரசியல் கட்சியினர், ஆதரவாளர்கள் என ஏராளமானோர் குவிந்தனர். 

இதனால் மாநகராட்சி அலுவலகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. காலை 9.30 மணிக்கு பதவி ஏற்பு விழா தொடங்கியது.
இதில் 1-வது வார்டு முதல் வரிசைப்படி 48 வார்டுகளில் வெற்றிபெற்றவர்களும் ஒவ்வொருவராக விழா மேடைக்கு அழைக்கப்பட்டனர். 

அதன்படி கவுன்சிலர்கள் மேடைக்கு வந்து பதவி ஏற்றனர். அவர்களுக்கு மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

மாலை, சால்வை அணிவிப்பு 

ஒவ்வொரு கவுன்சிலரும் பதவி பிரமாணம் எடுத்ததும் தங்களுடைய கட்சி தலைவர்களுக்கு நன்றி தெரிவித்தனர். அப்போது ஆதரவாளர்கள் கைதட்டி பலத்த ஆரவாரம் செய்தனர். 

இதேபோல் தங்கள் வார்டு பொதுமக்களுக்கும் நன்றி கூறினர். இதற்கிடையே 33-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ஜான்பீட்டர் கட்சி தலைவர்களுக்கு நன்றி கூறியதோடு, தனக்கு வாக்களித்த 1,462 பேருக்கும் நன்றி என்றார்.

இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 35-வது வார்டு கவுன்சிலர் ஜோதிபாசு, சாதி-மத வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒற்றுமையாக வாழ பாடுபடுவேன். 

மாநகராட்சி பணிகளுக்கு கையூட்டு பெறாமல் பணியாற்றுவேன் என்று தெரிவித்தது அனைவரையும் கவர்ந்தது. விழாவின் இறுதியில் கவுன்சிலர்களுக்கு அரசியல் கட்சியினர், ஆதரவாளர்கள் மாலை மற்றும் சால்வை அணிவித்தனர்.

போட்டி கோஷத்தால் பரபரப்பு 

மாநகராட்சி கவுன்சிலர்களின் பதவி ஏற்பு விழா நிறைவுபெற்றதும் விழா மேடையின் முன்பு 14-வது வார்டு பா.ஜனதா கவுன்சிலர் தனபாலனுக்கு கட்சியினர் மாலை அணிவித்தனர். மேலும் பாரத் மாதாகி ஜே, ஜெய்ஹிந்த் என்று உரக்க கோஷம் எழுப்பினர். 

இதையடுத்து திரண்டிருந்த ஏராளமான தி.மு.க.வினர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்க என்று கோஷமிட்டனர்.
உடனே அ.தி.மு.க.வினர் புரட்சி தலைவி ஜெயலலிதா வாழ்க என்று கோஷம் எழுப்பினர். அதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினரும் கோஷம் எழுப்ப தொடங்கினர். 

பின்னர் அனைவரும் கோஷமிட்டபடி மாநகராட்சி அலுவலக வளாகத்தை விட்டு வெளியேறினர். இந்த சம்பவத்தால் மாநகராட்சி கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழாவில் பரபரப்பு ஏற்பட்டது.

விழாவில் பந்தலில் பத்திரிகையாளர்கள் அமருவதற்கு தனியாக நாற்காலிகள் போடப்பட்டு இருந்தன. அதில் பெரும்பாலான நாற்காலிகளை அரசியல் கட்சியினர், கவுன்சிலர்களின் ஆதரவாளர்கள் ஆக்கிரமித்து கொண்டனர். இதனால் பத்திரிகையாளர்கள் பலர் நின்று கொண்டே செய்தி சேகரிக்கும் நிலை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story