நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற 210 கவுன்சிலர்கள் பதவி ஏற்பு
விழுப்புரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 210 கவுன்சிலர்கள் நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர்.
விழுப்புரம்,
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 19-ந் தேதியன்று நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்தில் 3 நகராட்சிகள், 7 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் மொத்தமுள்ள 210 கவுன்சிலர் பதவியிடங்களில் விக்கிரவாண்டி பேரூராட்சியில் ஒருவரும், அரகண்டநல்லூர் பேரூராட்சியில் ஒருவரும் ஏற்கனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
இதன் அடிப்படையில் மாவட்டத்தில் உள்ள 3 நகராட்சிகளின் 102 நகரமன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 7 பேரூராட்சிகளின் 106 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் தேர்தல் நடந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை முடிவில் மொத்தமுள்ள 210 இடங்களில் தி.மு.க. 130 இடங்களிலும், அ.தி.மு.க. 33 இடங்களிலும், பா.ம.க. 6 இடங்களிலும், காங்கிரஸ் 5 இடங்களிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி 2 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒரு இடத்திலும், தே.மு.தி.க. ஒரு இடத்திலும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன. இதுதவிர சுயேச்சையாக போட்டியிட்டவர்களில் 31 பேர் வெற்றி பெற்றனர்.
கவுன்சிலர்கள் பதவியேற்பு
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 210 கவுன்சிலர்களும் பதவி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று அந்தந்த நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் நடைபெற்றது.
அந்த வகையில் விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தி.மு.க.வை சேர்ந்த 25 கவுன்சிலர்கள், அ.தி.மு.க.வை சேர்ந்த 7 கவுன்சிலர்கள், பா.ம.க.வை சேர்ந்த 2 கவுன்சிலர்கள், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 கவுன்சிலர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 2 கவுன்சிலர்கள், மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த ஒரு கவுன்சிலர் மற்றும் சுயேச்சை கவுன்சிலர்கள் 3 பேர் என 42 வார்டு கவுன்சிலர்களும் மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான மோகன், நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேந்திரஷா ஆகியோர் முன்னிலையில் பதவிஏற்றுக்கொண்டனர்.
அமைச்சர் பொன்முடி அறிவுரை
இந்நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, துரை.ரவிக்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி பேசுகையில், புதியதாக பதவியேற்றுள்ள நகரமன்ற கவுன்சிலர்கள் அனைவரும் அரசின் திட்டங்களை செயல்படுத்தும் விதமாக அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்ற வேண்டும். விழுப்புரம் நகரம் மேம்பாடு அடைந்திட அனைத்து திட்டப்பணிகளையும் சிறப்பாக மேற்கொள்ள கவுன்சிலர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.
திண்டிவனம்-கோட்டக்குப்பம்
திண்டிவனம் நகராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 23 தி.மு.க. கவுன்சிலர்கள், 4 அ.தி.மு.க. கவுன்சிலர்கள், 2 பா.ம.க. கவுன்சிலர்கள், ஒரு விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர், 3 சுயேச்சை கவுன்சிலர்கள் என 33 வார்டு கவுன்சிலர்களும் நகராட்சி ஆணையர் சவுந்தரராஜன் முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார்,மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் ஷீலா தேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலகத்தில் நடந்த விழாவில் 17 தி.மு.க. கவுன்சிலர்கள், 3 அ.தி.மு.க. கவுன்சிலர்கள், ஒரு பா.ம.க. கவுன்சிலர் மற்றும் 6 சுயேச்சை கவுன்சிலர்கள் என மொத்தம் 27 கவுன்சிலர்கள் நகராட்சி ஆணையர் பானுமதி முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டனர்.
செஞ்சி-அனந்தபுரம்
செஞ்சி பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த பதவி ஏற்பு விழாவில் 17 தி.மு.க. கவுன்சிலர்கள், ஒரு அ.தி.மு.க. கவுன்சிலர் என மொத்தம் 18 வார்டு கவுன்சிலர்களும் அமைச்சர் செஞ்சி மஸ்தான், பேரூராட்சி செயல் அலுவலர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டனர். இதில் செஞ்சி ஒன்றியக்குழு தலைவர் விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அனந்தபுரம் பேரூராட்சியில் நடந்த பதவி ஏற்பு விழாவில் பேரூராட்சி செயல் அலுவலர் மலர் முன்னிைலயில் 9 தி.மு.க. கவுன்சிலர்கள், 5 அ.தி.மு.க. கவுன்சிலர்கள், ஒரு சுயேச்சை கவுன்சிலர்என மொத்தம் 15 வார்டு கவுன்சிலர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். இதில் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விக்கிரவாண்டி-மரக்காணம்
விக்கிரவாண்டி பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு 12 தி.மு.க. கவுன்சிலர்கள், 3 அ.தி.மு.க. கவுன்சிலர்கள் என 15 வார்டு கவுன்சிலர்கள் செயல் அலுவலர் அண்ணாதுரை முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டனர். விழாவில் புகழேந்தி எம்.எல்.ஏ., தேர்தல் பார்வையாளர் ரமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மரக்காணம் பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த விழாவில் 8 தி.மு.க. கவுன்சிலர்கள், 4 அ.தி.மு.க. கவுன்சிலர்கள், ஒரு பா.ம.க. கவுன்சிலர், 5 சுயேச்சை கவுன்சிலர்கள் என 19 வார்டு கவுன்சிலர்கள் செயல் அலுவலர் தியாகராஜன், தேர்தல் அலுவலர் மணிவாசகம் ஆகியோர் முன்னிலையில் பதவிஏற்றுக்கொண்டனர்.
அரகண்டநல்லூர்
அரகண்டநல்லூர் பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த விழாவில் 6 தி.மு.க. கவுன்சிலர்கள், 4 அ.தி.மு.க. கவுன்சிலர்கள், ஒரு காங்கிரஸ் கவுன்சிலர், ஒரு சுயேச்சை கவுன்சிலர் என மொத்தம் 12 வார்டு கவுன்சிலர்கள் அமைச்சர் பொன்முடி, செயல் அலுவலர் முருகன் ஆகியோர் முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டனர். இதில் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த விழாவில் 9 தி.மு.க. கவுன்சிலர்கள், 6 சுயேச்சை கவுன்சிலர்கள் என 15 வார்டு கவுன்சிலர்கள் அமைச்சர் பொன்முடி, கலெக்டர் மோகன் செயல் அலுவலர் ஆனந்தன்,ஒன்றிய குழு தலைவர் ஓம்சிவ சக்தி வேல் ஆகியோர் முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டனர்.
வளவனூர்
வளவனூர் பேரூராட்சியில் 8 தி.மு.க. கவுன்சிலர்கள், 2 அ.தி.மு.க.கவுன்சிலர்கள், 1 காங்கிரஸ் கவுன்சிலர், 1 தே.மு.தி.க.கவுன்சிலர், 1 அ.ம.மு.க. கவுன்சிலர், 2 சுயேச்சை கவுன்சிலர்கள் என மொத்தம் 15 கவுன்சிலர்கள் லட்சுமணன் எம்.எல்.ஏ., செயல் அலுவலர் ஷேக் லத்தீப் ஆகியோர் முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டனர்.
இதனை தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) காலை நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தலைவர் பதவிக்கான தேர்தலும், பிற்பகல் துணைத்தலைவருக்கான தேர்தலும் நடைபெறுகிறது.
Related Tags :
Next Story